பக்கம்:கனிச்சாறு 4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122  கனிச்சாறு – நான்காம் தொகுதி


20. கல்வி.

கண்டார் அறிவைக் காண்பது கல்வி!
கற்பதி னிற்பது கல்வி!
அண்டார் அண்டியு மளிப்பது கல்வி!
அளித்திட வளர்வதுங் கல்வி!
உண்டார்க் குவகை ஊட்டுதல் கல்வி!
உய்யார்க் குறுதுணை கல்வி!
கொண்டார் இசைபெற வைப்பது கல்வி!
குனிதொழில் ஒழிப்பது மஃதே! 21

21. தொழில் முறைகள்.

உண்ணலுக் குதவுநற் றொழில்முதல் தொழிலே!
உடுத்தற் குறுதொழில் இரண்டே!
மண்ணுளே உறையுளை மடுத்தலும் மூன்றே!
மற்றவை துணையவை தமக்கே!
எண்ணரும் பொருளை, ஈந்துமுத் தொழிலும்
இடர்ப்பெறா திருத்தலும் இனிதே!
கண்ணெனு மிவற்றைக் காப்பதே அரசு!
காவாக் காலுயிர் கவல்மே! 22

22. காப்பு.

கல்லும் இரும்புங் காத்தன ஒருகால்!
காலாள் கரிபரிப் படையும்
வில்லும் வாளும் காத்தன ஒருகால்!
விரிகா னுயரெயில் அகழி
அல்லும் பகலும் காத்தன ஒருகால்!
அவையழிந் தினியெஞ் ஞான்றுஞ்
சொல்லுஞ் செயலுங் காப்பெனக் கொள்ளுஞ்
சிறுநா டுஞ்சிறப் புறுமே! 23

23. நட்பு.

அன்பொடு கூடிய விருநெஞ் சறத்தோ
டழுந்துயர் நினைவதும் யாண்டும்
இன்பொடு விளைந்து விளைக்குமின் சொல்லும்
இழியா தொழுங்குயர் செயலும்
என்பொடு பிணைந்த இழிவிகழ் வாழ்வும்
இவைபுல் லியவீ ருயிரும்
துன்பினுங் கூடித் துலங்குதல் நட்பே!
தொடர்புண் டதற்கிலை பிரிவே! 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/157&oldid=1444184" இலிருந்து மீள்விக்கப்பட்டது