பக்கம்:கனிச்சாறு 4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 கனிச்சாறு – நான்காம் தொகுதி


புத்தகத்தை நீதூக்கிப் போகையிலும் நீகற்ற
வித்தாரப் பேச்சுகளை வீடுவந்து சொல்கையிலும்,

காது மணக்குமிரு கண்குளிரும்! செந்தமிழில்
ஓது கலைபயின்றால் உன்னாடு பூக்குமடா!

சாதி சமயமென்று சாத்திரங்கள் பேசியதை
மோதி முரித்தாலிம் முத்தமிழ்நா டேத்துமடா!

குச்சுச் குடிசையிலே கோவேநீ பூத்தாலும்
மச்சில் குடியேறி மானேநீ வாழ்ந்திடடா!

வேலையெனப் போயிருக்கும் வேந்தனே, உன்தகப்பன்
மாலை திரும்பிவந்து மார்மே லுனைப்போட்டுச்

சேரன் கதைபாடிச் சோழன் புகழ்கூறித்
தார்நெஞ்சன் பாண்டியனாம் தாயகத்தைக் காத்த

மறம்பாடிச் சொல்வார்! மரகதமே! வள்ளுவரின்
அறம்பாடிச் சொல்வார்! அழாமல் நீ கண்ணுறங்கு!

ஆண்ட தமிழ்மறவர் அச்சே நீ கண்ணுறங்கு!
நீண்ட கதை பாட நேரமில்லை கண்ணுறங்கு!

-1958
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/169&oldid=1444202" இலிருந்து மீள்விக்கப்பட்டது