பக்கம்:கனிச்சாறு 4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  171


கருக்கொளும் கற்பனை உலகினிற் புகுந்து
காதலுங் கன்னியும் பாடிட விழைந்தாய்!
திருக்கொளும் காட்சியை நினைவுப் பசிக்கே
தீனியாய் எண்ணிநின் தூவலை எடுத்தாய்!
உருக்கொளும் மாந்தரிற் பற்பல கோடி
உணவும் உடைகளும் கூரையும் இன்றித்
தெருக்களிற் புரளும் மக்களைப் - பாவல,
தேற்றி உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்! 3

இலக்கணப் புலமையால் மொழிமழை பொழிந்தே
இலக்கியம் பாடிட ஏடெடுக் கின்றாய்!
துலக்கிய காட்சிகள் ஆயிரங் கோடி
தூவல் மையினால் படம்பிடிக் கின்றாய்!
புலக்கவின் கொண்டவை அவையெனப் பேசியே
புகழ்ந்துரை யாடிடப் போற்றிடச் செய்வாய்!
கலக்குறும் வறுமை மாந்தரைப்-பாவல,
கவின்கொள உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்! 4

காலமும் வானையும் கதிரையும் நிலவையும்
காற்றையும் மலைதரும் ஊற்றையும் கண்டு,
கோலமும் காட்சியும் உன்மனக் கூர்மையால்
கொண்ட விளக்கமும் பற்பல விண்டாய்!
ஞாலமும் நாளையும் நாளையும் பாடி
நலிவினும் மெலிவிலும் தப்பிய துண்டா?
ஓலமும் நீருமாய் உழல்வரைப்-பாவல,
உயர்த்தி மலர்த்திடும் பாடலைப் பாடுவாய்! 5

விண்ணையும் மண்ணையும் உலாவரப் போந்தாய்!
வீட்டையும் நாட்டையும் விளைத்திட மறந்தாய்!
எண்ணரும் புதுமையால் செயல்பல செய்தாய்!
ஏழ்மையை விரட்டிட என்பயன் கண்டாய்?
திண்ணருஞ் சொல்லையும் பொருளையும் திணித்துத்
தினவுறும் மனத்தினை அமைவுறச் செய்வாய்!
உண்ணரும் பசியினால் நலிவரைப்-பாவல,
ஊக்கி உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்! 6

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/206&oldid=1444509" இலிருந்து மீள்விக்கப்பட்டது