பக்கம்:கனிச்சாறு 4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  193


135

மக்களைச் சமம் – எனச் செய்வோம் !


பிறப்பினால் மக்களை நால்வகை வருணமாய்ப்
பிரிப்பதும், அவர்களை மேலும்
சிறப்பிலாப் பலநூறு சாதியாய்ப் பகுப்பதும்
சிந்தித்துப் பார், தம்பி, இழிவே!
உறுப்புகள் எல்லாம் ஒன்றுபோல் உள்ளன!
உணர்வதும் அறிவதும் பொதுவே!
மறுப்பிதற் குண்டோ? வேற்றுமை உண்டோ?
மக்களைச் சமம்எனச் செய்வோம்!

இறையவன் என்றோர் உணர்வினைக் கொண்டே
எத்தனைப் பிரிவுகள் மதங்கள்!
மறைவென்ன தம்பி! மறுப்பென்ன தம்பி!
மதங்களால் எத்தனைச் சண்டை?
நிறைவுற மக்களின் நலன்கள் கருதிடும்
நிலைதான் அரசியல் என்றால்,
குறைவறக் கட்சிகள் பற்பல வேண்டுமோ?
கொள்கையென்(று) ஒன்றுபோ தாதோ?

மக்களைச் சுரண்டியே பிழைக்குமோர் கூட்டம்!
மற்றவர் ஏழைகள் ஆமோ?
தக்கவா றெல்லா உடைமையும் பொதுவெனத்
தகுதிசெய் தால்அது தீதோ?
மிக்கவே நலன்களை ஒருவனே நுகர்வதும்
மிகுதியோர் சாவதும் நன்றோ?
ஒக்கவே அனைவரும் உண்பதும் உடுப்பதும்
உறைவதும் சமம்எனச் செய்வோம்!

-1990
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/228&oldid=1444544" இலிருந்து மீள்விக்கப்பட்டது