பக்கம்:கனிச்சாறு 4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  195


137

சிந்தித்துப் பார்ப்பீர்களே !


சிந்தித்துப் பார்ப்பீர்களே!-எதிலும்
சிறந்தவற்றை ஏற்பீர்களே!-நன்றாய்ச்
சிந்தித்துப் பார்ப்பீர்களே!


முந்திச்செய் தார்என்ப தாலோ-ஒன்றை
மூத்தோர்எல் லாரும்செய் தார்என்ப தாலோ,
வந்திட்ட பழக்கமிது வென்றோ- எங்கள்
வழிவழி வழக்கமிது வென்றோ எண் ணாமல் (சிந்தித்துப்)

பழைமையிது பெருமையிது வென்றோ-எங்கள்
பாட்டனார் சொன்னதிது செய்ததிது வென்றோ
பிழையான கருத்துகளை எல்லாம்-எண்ணிப்
பாராமல் ஓராமல் செய்வதற்கு முன்னம் (சிந்தித்துப்)

புதுமையிது கவர்ச்சியிது வென்றோ-மேற்குப்
புறநாட்டார் கீழ்நாட்டார் புகழ்ந்ததிது வென்றோ
கதுமெனவே உணர்வுகொள் ளாமல்-முழுக்
கவனமாய் அமைதியாய் அறிவுடனே எதையும் (சிந்தித்துப்)

-1990


138

எல்லா நிலையிலும் உயர்வடை !


ஆரவார அரசியல் நிலைகள்;
ஆடம்பரப் போலிமை வாழ்க்கை;
ஈரமிலாத மக்கள் மனநிலை;
எடுத்தெறிந்து பேசும் பேச்சுகள்;

பொய்,புரட் டான வாணிகம்;
பூசல்கள் நிறைந்த உறவுகள்;
கையூட்டுக் கல்வி! ஆட்சிகள்;
கயமை நிறைந்த கலைகள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/230&oldid=1444548" இலிருந்து மீள்விக்கப்பட்டது