பக்கம்:கனிச்சாறு 4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206  கனிச்சாறு - நான்காம் தொகுதி


150

வாழ்வுக்கு நோக்கம் தேவை !


‘நோக்கம்’ எனஒன்(று) இல்லாது போனால்,
வாழ்க்கை நொய்ந்தே போகும்! - நம்
உள்ளம் நொடிந்தே சாகும்!
ஊக்கம் குறையும்: உழைப்பும் சலிக்கும்;
உலகில் எதுவும் புளிக்கும்! - நம்
உறவுகள் பார்த்தே இளிக்கும்!

ஆக்கம் குறையும்; அறிவும் மயங்கும்!
அல்லல் படையொடு ஊன்றும்! - பிறர்
அன்பும் கசப்பாய்த் தோன்றும்!
தாக்கம் வந்தே உடலை வருத்தும்!
தவிப்பும் நெஞ்சினை இறுக்கும் - நமைத்
தற்கொலை செய்திடச் சறுக்கும்!

பணத்தை ஈட்டுதல் நோக்கம் ஆகாது;
பதுக்கவும் பெருக்கவும் தூண்டும்! - பல
பயன்களுக் கதில்வழி வேண்டும்!
குணத்தால் சிறப்பதும் வாழ்வில் போதாது;
குடிநலம் பெறல்அதில் இல்லை; பல
கொடுமைகள் எதிர்வரின் தொல்லை!

பொதுநல உணர்வே உயர்வான நோக்கம்;
புதுப்புது விளைவுக்கும் ஊக்கம்! - கொடும்
போரிலா உலகுக்கும் ஆக்கம்!.
எதுஉயர்(வு) எதுஇழி(வு) என்றெண்ணிச் செய்க!
இனிவரும் மக்கட்குப் புதுமை! - மக்கள்
எல்லார்க்கும் எல்லாமே பொதுமை!

-1994
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/241&oldid=1444564" இலிருந்து மீள்விக்கப்பட்டது