பக்கம்:கனிச்சாறு 4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  215


155

உலகத் தமிழினம் ஒன்று படுக்கும்
கழக முன்னேற்றம் காண்குறுவோமே!


அன்னைத் தமிழ்மொழி அழகும் தூய்மையும்
முன்னைப் பழம்பெரு மொய்ம்பும் எய்துதல்!

உழைப்பவர், அறிஞர், உயர்ந்தோர், தாழ்ந்தோர்,
இழைத்த சாதிகள், மதங்கள் -எனும் பல
தெரிநிலை வேற்றுமைத் தீங்குகள் அற்ற
சரிநிகர் என்னும் சமநிலைக் குமுகம்!

இழிவும் பூசலும் ஏமாற்றும் இலதாய்ப்
பழிவரின் விலகிடும் பண்பமை அரசியல்!

இயற்கைப் பொருள்களும் இயற்றல் பொருள்களும்
மயற்கை யின்றி, மக்கள் அனைவரும்
தேர்தலின் அமைத்த திறவோர் அரசினைச்
சார்தலின் அல்லது தனியவர் சாராது,
பொதுமை உரிமை, பொதுமை உழைப்பெனும்
புதுமை நோக்கிய பொருளியல் கொள்கை!

மனமும் அறிவும் வாழ்க்கையும் மாண்புறும்
இனநலன் கெடாத இனியநற் கலைகள்!

பழந்தமிழ் மரபும் பரந்தநல் லெண்ணமும்
இழந்தசீர் ஒழுக்கமும் எங்கணும் பரப்பி
மாந்தவியல் சிறக்க மற்றவர் மரபில்
ஏய்ந்தவை தழுவும் இனியபண் பாடு!

அறுவகைத் துறையினும் அன்றன்று துலங்கும்
அறிவியல் தழுவிய செறிவியல் போக்கு!
-என்றிவ் வெழுநிலைக் கொள்கைகள் ஏந்தி
அன்றைத் தமிழினம் அனைத்து நாட்டினும்

வாழ்முறை தேறி வழங்குநலம் கோரித்
தாழ்வுநிலை போக்கித் தக்கநிலை ஊக்கி,
உலகத் தமிழினம் ஒன்று படுக்கும்
கழக முன்னேற்றம் காண்குறு வோமே!

_1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/250&oldid=1444631" இலிருந்து மீள்விக்கப்பட்டது