பக்கம்:கனிச்சாறு 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 கனிச்சாறு – நான்காம் தொகுதி


15

மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார் !

மாணவப் பருவம் மாண்புடைப் பருவம்!
மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார்.
காண்பன எல்லாம் கலைநா கரிகம்!
மாண்பெனப் படுவது மனநா கரிகம்!
அடையும் மாற்றம் அனைத்தும் ஒப்பலாம்!
உடையும் நடையும் மாறலாம்; ஆனால்
உள்ளமும் ஒழுங்கும் உயர்ந்தே இருப்பன.
பள்ளி என்பதோ ஒழுக்கம் பயிலிடம்!
துள்ளும் இளமையின் துடுக்கை அடக்கி
விள்ளும் அறிவெலாம் விளங்கக் கற்றிடும் 10
கல்விக் கூடம் கலைபயில் கழகம்!

செல்வச் செழுமையின் கல்வியே செழுமை.
விலங்கி னின்று வெளியே றியவன்
விலங்கினும் உயர்ந்து விளங்கியோன், மாந்தன்!
விலங்கி னின்று விலகியோன் என்றால்
“விலங்கினும் உள்ளம் விளங்கப் பெற்றவன்;
விலங்கினும் அறிவு விளங்கப் பெற்றவன்;
விலங்கினும் ஒழுக்கம் விளங்கப் பெற்றவன்”
- என்பதே பொருளாம்! 20
எனவே உளத்தால், அறிவினால், ஒழுங்கால்
இழிந்த ஒருவனை விலங்கே எனலாம்!
இழிந்த ஒருவனை வள்ளுவ ஏந்தல்
“மயிரனை யான்”- என மதிக்கிலா துரைப்பார்.

தலைமயிர்ப் பெருமை தலையொடு வரையே!
தலையினின் றிழியின் தாழச்சியுற் றிழிபடும்!
உயர்ந்துளான் பெருமையும் ஒழுங்குள வரையே!
ஒழுங்கிலான் ஒருவனை விலங்கே என்க!
குறள்மறை அவனைப் ‘பிணம்’- எனக் கூறும்!

‘மாந்தன்’ என்னும் முழுவடி வத்தின் 30
ஏந்தும் இளமையே எழில்மிகு பருவம்!
இளமை அழியும்; வாழ்க்கையுந் தாழும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/61&oldid=1440491" இலிருந்து மீள்விக்கப்பட்டது