பக்கம்:கனிச்சாறு 4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 29


ஒருவர் பசித்திட ஒருவர் உண்கிறோம்!
ஒருவர் அம்மணம்! ஒருவர்க்குப் பட்டுடை!

கூரை பிய்ந்த குடிசை ஒருபுறம்!
காரை பூசிய கட்டிடம் ஒருபுறம்!

வீங்கிடும் வெற்றுக் கால்களோர் பக்கம்!
தூங்கிடச் செய்யும் ஊர்திஓர் பக்கம்!

மலக்கூடை ஒருத்தி மண்டையில் சுமப்பாள்!
மலர்க்கடை ஒருத்தி கொண்டையில் சுமப்பாள்!

பாலுக் கேங்கும் பசித்தொரு குழந்தை!
பாலைக் குமட்டிடும் பசியிலா தொன்று!

காயும் வெயிலில் கருகுவான் ஒருவன்;
ஓய்வெனக் குற்றாலம் ஓடுவான் ஒருவன்!

மருந்திலா ஏழ்மையில் இறப்பான் ஒருவன்!
விருந்து செரித்திட மருந்துண்பான் ஒருவன்!
மேல்பிறப் பென்றொரு மடையன் உளறுவான்;
கீழ்ப்பிறப் பென்றே ஒருவனைக் காட்டுடிவான்!

இன்னும் எத்தனை ஏற்றத் தாழ்வுகள்!
சொன்னால் நம்பவும் மறுப்பாய் தம்பி!
அடடா! தம்பி! ஆரெடுத் துரைப்பார்?

அன்பும் அறிவும் அகன்ற உள்ளமும்
இன்றைய வாழ்வில் யாருக்கு வேண்டும்...?
திருக்குறள் அறிவு செருப்புக் காகுமா?
இருக்கும் நூல்களை எவன்படிக் கின்றான்?

காசு பணங்களே கனவிலும் நனவிலும்
பேச்சிலும் செயலிலும் பெருமைப் படும்பொருள்!
பொன்னும் மண்ணும் என்றும் இருக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/64&oldid=1440498" இலிருந்து மீள்விக்கப்பட்டது