பக்கம்:கனிச்சாறு 4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 கனிச்சாறு – நான்காம் தொகுதி


இன்னும் இன்னும் என்கிற நாம்தாம்
மடிந்து மட்கி மண்ணாய்ப் போவோம்!
விடிந்தது முதலா இருள்வது வரைக்கும்
பணம்பணம் என்றே பேயாய் அலைகிறோம்!
மனத்தை எந்த மடையன் நினைத்தான்?
பொருள் தேவைதான்! பொருளே தேவையா?
இருள்உல கிதனை இடித்துத் தள்ளடா!
எத்துணைப் பெரிய உலகம் என்கிறோம்!
எத்துணைச் சிறியது மக்களின் உள்ளம்!

தம்பி! ஒன்று கேள் :
நாறும் மாந்தக் குலத்தைக் கழுவடா!
ஏறும் உணர்வால் அறிவொளி ஏற்றடா!
குள்ளக் கொள்கையைக் குப்பையில் போடு!
உள்ளச் செழுமைக்கு உரமிட்டு வா, நீ!
தூசு தும்புகள் உடனே துடைத்தெறி!
மாசினை அகற்று; மனத்தைத் தூய்மைசெய்!
காசைப் பெரிதெனக் கருதி விடாதே!
மூசைப் பொன்னும் மண்ணும் ஒன்றே!
வாழ்வு பெரிதிலை; வளமையே பெரிது!
தாழ்வைத் தூள்செய்! தயக்கம் கொளாதே!

கற்ற கல்வியால் கவின்செய் உலகை!
உற்ற இழிவுகள் ஊதித் தள்ளு!
மடமையை வீழ்த்து! மக்களை ஒன்றுசேர்!
கடமையை உணர்த்து! கன்னித் தமிழினால்
கமழக் கமழ உரைசெய்! வினைசெய்!
தமிழத் தம்பியே! தமிழத் தம்பியே!
உலகைத் திருத்தடா, தமிழத் தம்பியே!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/65&oldid=1440499" இலிருந்து மீள்விக்கப்பட்டது