பக்கம்:கனிச்சாறு 4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 கனிச்சாறு – நான்காம் தொகுதி


30

வாழ்க்கையில் பீடுசேர் !


இன்பத்தை யே, நாடி
ஏற்றத்தை யே, தேடி
ஏங்கிக் கலங்காதே பாரில்! - அக்கால்
இயற்கை விளங்காது நேரில்! - பெருந்
துன்பத்தையும் நாடு!
துயரத்தையும் தேடு!
தொல்லையை யும்சுவை பார்ப்பாய்! - வருந்
துன்பமும் இன்பமென் றார்ப்பாய்!

குன்றுக்கு மேலேயே
கொண்டையத் துச்சிக்கே
சென்று வரல் ஒரு நேரம் - மலை
சேருவ தே, அன்று வீரம்! - நீ
நின்ற நிலத்துக்கு
நேராக, கீழாக
நெட்டை நெடுங்குழி தோண்டு - உள்
நெருப்புக் குழம் பையுந் தாண்டு!

உண்ணும் உணவுக்கும்
உறங்கும் உறக்கத்தும்
ஓயா தலைவதோ வாழ்க்கை? - ஓர்
எறும்புக்கும் உண்டந்தப் பூழ்க்கை! - நின்
எண்ணுந் திறனுக்கும்
ஏற்ற வலிமைக்கும்
என்னதான் உண்டுகொல் பீடு? - உயிர்
ஏகின பின்சுடு காடு!

விசும்பை அளாவிடு!
விண்ணை அளந்திடு!
வெட்ட வெளியினில் கால்வை - கை
வீசி நடத்திடு வாழ்வை! - ஒரு
பசும்புல்லின் வேருக்குள்
பறவையின் இறக் கைக்குள்
பார்வையை, எண்ணத்தை நீ, வை - பெரும்
பாட்டில் நனைத்திடு நாவை!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/83&oldid=1440703" இலிருந்து மீள்விக்கப்பட்டது