பக்கம்:கனிச்சாறு 5.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  75


83  சினம்!

சினத்தைப் பழகாதே தம்பி - நீ
சிறிதே என் பேச்சை உன்காதால் கேள் தம்பி! (சினத்தை)

மனத்தில் சினத்தை எண்ணாதே -உன்
மாண்பினை எப்போதும் இழக்க வொண்ணாதே! (சினத்தை)

கண்ணைச் சிவந்திட வைக்கும் - உனைக்
கண்ணிமைப் பொழுதில் குலைந்திட வைக்கும்;
மண்ணை இறைத்திட வைக்கும் - பெரும்
மானத்தை நொடியினில் இழந்திட வைக்கும்!
(சினத்தை)

உன்னை மறந்திடச் செய்யும் - முன்
உள்ளதைத் தூக்கி அடித்திடச் செய்யும்;
அன்னைக்கும் தீங்கினைப் பண்ணும் - முன்
ஆரெதிர் வந்தாலும் அறைந்திடப் பண்ணும்!
(சினத்தை)

சோற்றைக் கவிழ்த்திடச் செய்யும் - உளச்
சோர்வை எப்போதும் விளைந்திடச் செய்யும்;
கூற்றை வணங்கிடச் செய்யும் - பெருங்
கொலையாவும் எளிதில் புரிந்திடச் செய்யும்!
(சினத்தை)

கடமை துறந்திடச் செய்யும்! - தீய
கயமைக்கே உன்னை வணங்கிடச் செய்யும்;
மடமை மிகுந்திட வைக்கும் - உன்
மகிழ்ச்சியை எப்போதும் விரட்டி உதைக்கும்!
(சினத்தை)

ஏறிய வெஞ்சினம் கொள்வோன் - வாழ்வில்
ஏறாது தன்நிலை குலைந்திட மாள்வான்;
ஆறிய உள்ளத்தால் காண்பாய் - உன்னை
ஆட்கொண்ட கடுஞ்சினம் செய்திட்ட தீங்கை!
(சினத்தை)

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/109&oldid=1424912" இலிருந்து மீள்விக்கப்பட்டது