பக்கம்:கனிச்சாறு 5.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


92  பள்ளிக்குத் தாழ்ப்பாள் உண்டு!
கல்விக்குத் தாழ்ப்பாள் இல்லை!


பள்ளிப் பிள்ளையே! பள்ளிப் பிள்ளையே!
பள்ளி திறந்தது; பள்ளிப் பிள்ளையே!
திறந்த பள்ளிக்குச் சிட்டுக் குருவிபோல்
பறந்து செல்லும் பள்ளிப் பிள்ளையே!
உனக்கொன்று சொல்வேன்; உற்றுக் கேட்பாய்!

உனக்கென விழிகள் உள்ளன; அவைமேல்
துருதுரு வென, இரண்டு இமைகள் உள்ளன.
விருப்ப மில்லாப் பொழுதில்உன் இமைகள்
விழிப்பல கணிகளை மூடிக் கொள் கின்றன!
காட்சி அறிவுக்குக் கதவிடு கின்றன!
ஆனால் உன்றன், மனமும் மூளையும்
சும்மா இருக்குமா சொல்லுக தம்பி!

இம்மா பெரிய உலக உருண்டையில்
எத்தனைப் பொருள்கள்! எத்தனை அறிவு!
எத்தனை மலைகள்! எத்தனைக் கடல்கள்!
தோற்றங்கள் எத்தனை! மாற்றங்கள் எத்தனை!

ஊற்றுகள், ஆறுகள், உழுதநன் னிலங்கள்,
நிலத்திணை வகைகள், பறவைகள், விலங்குகள்,
அலைந்து திரியும் மக்கள் கூட் டங்கள் -
அத்தனைப் பொருள்களும் அவற்றின் கதைகளும்
எத்தனைப் பெரிய அறிவுப் பொத்தகம்!

இயற்கை என்பதோ இணையிலாக் கல்வி நூல்!
உலகம் என்பதோ விரிந்த சுவடி!

உலகைச் சுற்றிலும் பெருவிரி வானம்!
விரிந்த வானில் எண்ணிலா விண்மீன்!
பரிதிகள், கோள்கள், பாழ்வெளி மண்டிலம்!
அடடா! தம்பி எங்கணும் அறிவே!

செயற்கைப் பொத்தகம் மூடிக்கிடக்கும்!
இயற்கைப் பொத்தகம் மூடுவ தில்லை!
செயற்கைப் பொத்தகம் நாம்எழு தியது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/120&oldid=1424937" இலிருந்து மீள்விக்கப்பட்டது