பக்கம்:கனிச்சாறு 5.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


93  தமிழும் ஆங்கிலமும் தவறாது கற்பாய்!

அருமைத் தம்பியே! அழகுத் தங்கையே!
பெருமைக் கல்வியைப் பிழையறக் கற்றுவா!

இமிழ்கடல் உலகில் இருக்கும் மொழிகளுள்
தமிழ்மொழி உனக்குத் தாய்மொழி அன்றோ?

இன்பத் தமிழே எல்லா மொழிக்கும்
முன்பு பிறந்த முதுமொழி யாகும்!
செம்மையும் நுண்மையும் செறிந்த மொழியிது!
நம்மையும் பிறரையும் நயந்த மொழியிது
பண்பும் பயனும் பயக்கும் மொழிதமிழ்!
இன்பமும் அறமும் ஈயும் மொழிதமிழ்!
நம்மின் உளத்தையும் நடப்பையும் வாழ்வையும்
செம்மைப் படுத்தும் சிறந்த மொழியிதே!
'ஒளிதரும் வாழ்க்கைக்கு உகந்த மொழி' - என
வெளிநாட் டறிஞரும் வியந்த மொழியிதே!

தமிழரின் பெருமை தமிழினால் வந்தது!
தமிழரின் சிறுமை தமிழ் கெட வந்தது!

ஆகவே தம்பி, அன்றன் றைக்கும்
அறிவும் உணர்வும் தமிழினால் அடைக!
நெறிகளும் முறைகளும் நிறைந்துள, தமிழில்!

தமிழ்மொழி அறிவைக் தவறாது பெறுக,நீ!
தமிழில் உள்ள நூல்களைக் கற்றுவா!
தமிழ்வர லாறும் தமிழரின் வாழ்வும்
கமழக் கமழக் கற்றுவா தம்பி!

ஆங்கில மொழியையும் அதனோடு கற்பாய்!
ஈங்கிவை இரண்டையும் இருவிழி எனநினை!
ஆங்கில மொழியினால் அறிவியல் தேறலாம்!
வீங்குநீர் உலகில் யாங்கணும் உலவலாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/122&oldid=1425080" இலிருந்து மீள்விக்கப்பட்டது