பக்கம்:கனிச்சாறு 5.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


மானொன் றிருக்கும் காட்சிபோல்
மக்கள் பார்த்த நிலவிலே
ஆனை விழுந்த பள்ளம்போல்
அகன்ற குழிகள் கண்டனர்!

குதித்து நடந்து சென்றனர்;
குனிந்து நிமிர்ந்து பார்த்தனர்;
புதிய தரையில் உலவினர்!
புகைப் படங்கள் பிடித்தனர்!

காற்றி லாத பைகளில்
கல்லும் மண்ணும் நிரப்பினர்!
வேற்றோர் உலகத் தரையிலே
வெற்றிக் கொடியை நாட்டினர்!

நிலவுத் தரையில் நின்று, நாம்
நிற்கும் உலகைப் பார்த்தனர்!
குலவும் அழகைச் சுவைத்தனர்!
கோடி விண்மீன் கண்டனர்!

பாட்டன் கால நிலவுதான்!
பாட்டி சொன்ன கதைகள்தாம்!
வீட்டு வாயிற் படியிலே
வெளிச்சம் தந்த நிலவுதான்!

ஆற்று மணலில் நாமெல்லாம்
ஆடிக் களித்த நிலவுதான்!
சோற்றை ஊட்டும் அன்னையார்
சொல்லி அழைத்த நிலவுதான்!

காற்றும் நீரும் அங்கிலை!
கடலும் மலையும் அங்கிலை!
பீற்றைப் புல்லும் அங்கிலை!
பிழைக்கும் உயிரும் அங்கிலை!

வானில் பறந்த மூவரும்
வந்து கடலில் குதித்தனர்!
நானும் நீயும் இருக்கிறோம்;
நாட்டுக் கென்ன செய்கிறோம்?

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/136&oldid=1425739" இலிருந்து மீள்விக்கப்பட்டது