பக்கம்:கனிச்சாறு 5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


"ஆமைத் தம்பி! உன்னையே
அழைத்துப் போவ தென்னிலோ,
ஊமை போல், இக் குச்சியை
உன்றன் வாயால் பற்றிக்கொள்!

குச்சி முனைகள் இரண்டையும்
கௌவிப் பறந்து செல்லுவோம்!
உச்சி வானில் செல்கையில்
உன்றன் வாயைத் திறப்பையேல்

தரையில் வந்து வீழுவாய்
தவிடுபொடி ஆகுவாய்;
மறந்தி டாதே" என்றன.
“மறவேன்” என்ற(து) ஆமையே!

குச்சி ஒன்றைக் கொணர்ந்தன;
கௌவிக் கொண்ட(து) ஆமையும்!
உச்சி வானில் பறந்தன!
ஊரார் நின்று பார்த்தனர்!

சிறுவர் கைகள் கொட்டியே,
சிரித்துக் கூச்சல் போட்டனர்.
துறுதுறுத்த ஆமையும்
தூக்கிச் செல்லும் நண்பரைக்

"கீழே இரைச்சல் ஏன்”எனக்
கேட்க வாயைத் திறந்ததும்,
வீழ்ந்து நொறுங்கிப் போனதே!
வீணில் உயிரைத் துறந்ததே!

மூத்தோர் சொல்லைக் கேட்டிடா
மூட அமை இறந்ததே!
காத்துக் கொள்ளல் வேண்டுமே,
கடமை, அடக்கம் இரண்டையே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/138&oldid=1425738" இலிருந்து மீள்விக்கப்பட்டது