பக்கம்:கனிச்சாறு 5.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  109


“அப்பா என்னை உயிரோடே
அழைத்துப் போக வேண்டுமெனில்
தப்பா மல்ஆ யிரம்உருபா
தரங்கம் பாடிக் கடற்கரையில்

வரும்ஞா யிற்றுக் கிழமையிலே
வைத்திட வேண்டும்; இச்செய்தி
ஒருவரும் அறிந்திடக் கூடாதே!
அறிந்தால் உயிரும் இருக்காதே”

என்றே எழுதி விடுத்திருந்தான்!
இதனை படித்த பெற்றோர்கள்,
அன்றே நகைகளை விற்றார்கள்;
அந்தத் தொகையைச் சேர்த்தார்கள்!

பொன்னன் குறித்த அந்நாளில்
போனார் தந்தை தொகையோடு!
பொன்னன் வந்தான்; ஆயிரமும்
போனது போனது வீணாக!

பொன்னனைப் போலப் பிள்ளைகளும்
போவதும் எவர்பின், எங்கென்றே
முன்னறி வின்றிப் போவார்கள்!
முடிவில் தொல்லையும் வைப்பார்கள்!

வந்தவன் பின்னே சென்றதனால்
வந்தது தீங்கு! பெற்றோரும்
நொந்தனர்! ஆயிரம் உருபாவும்
நொடியில் பறந்து போனதன்றோ?

படிப்பறி விருந்தால் போதாது;
பட்டறி வோடே உலகறிவும்
படிப்பறி வோடு பயன்படுமாம்
பாடம் பொன்னன் கதையாகும்!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/143&oldid=1444845" இலிருந்து மீள்விக்கப்பட்டது