பக்கம்:கனிச்சாறு 5.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  121


எதற்காக இத்தனைச் சிண்டு சிணுக்கங்கள்?
ஏனிந்தக் கோணல் அழுமுகம்? - ஒரு
கதைசொல்வேன் வாருங்கள்! பாட்டும்சொல்வேன்;அதைக்
காதாரக் கேட்டு மகிழுங்கள்! (அம்மா)

-1980


120

நல்லவர் இடத்தில்
நீயும் ஓர் இடம்பெறு!


தம்பி, நீ ஒரு தமிழ்மகன்! உன்னை
நம்பி இந்த நாடும் மக்களும்
உள்ளனர் என்றே உணர்ந்து கொள்வாய்!

குள்ள மனத்தவன் இல்லை, நீ! மற்று, ஒரு
கொடுமை நெஞ்சின னும்,நீ இல்லை!
கடுமையாய்ப் படித்துக் கருத்தொடு வளரும்
நல்ல உளத்தவன்; நல்லவை நினைப்பவன்!
வல்ல செயலினன்; வகுத்த கடமையன்!

படித்து வளர்ந்து பட்டம் பெற்றே
இடித்த புளியாய் இருந்த இடத்திலே
அமர்ந்து, தின் னாமல் அலைந்து திரிந்து
நிமிர்ந்து குனிந்து, நேர்மை குலையாது,

நாட்டுத் தலைவனோ, நல்அதி காரியோ,
கேட்டை அகற்றும் அறிஞனோ, வணிகனோ
எந்த நிலைக்கு நீ வளர்ந் தாலும்
அந்த நிலையால் அனைவர்க்கும் உதவும்
தொண்டு நினைவைத் தொலையா நினைவாய்க்
கொண்டு வாழ்வைக் கொள்கை வாழ்வாய்
நடத்திப் புகழ்பெறு! நல்லவர் பெற்ற
இடத்தில் நீயும் ஓர் இடம்பெற்று உய்கவே!

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/155&oldid=1444887" இலிருந்து மீள்விக்கப்பட்டது