பக்கம்:கனிச்சாறு 5.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


4  கதிரவன்!

கதிரவனே! கதிரவனே!
கடலில்வந்த கதிரவனே!
உதிராத நெருப்பாகி
உடல் கொளுத்தும் கதிரவனே!

காலையிலே தோன்றுவதேன்?
கருவானம் நீந்துவதேன்?
மாலையிலே மறைகுவதேன்?
மக்களினம் வாழ்வதற்கோ?

காயாத ஈர மெல்லாம்
கை நீட்டித் துடைக்கின்றாய்!
ஓயாமல் ஒளி கொடுத்தே
உயிர் வாழச் செய்கின்றாய்!

கடல்நீரைக் காய்ச்சுகின்றாய்!
கருமுகிலை எழுப்புகின்றாய்!
உடல்குளிர மழை பொழிந்தே
உயிர் வாழச் செய்கின்றாய்!

உலகில் உள்ள இருள் விரட்ட
ஓடோடி வருகின்றாய்!
பலவகையாய் உதவுகின்றாய்!
பயன்கருதா துழைக்கின்றாய்!

எவ்வுயிர்க்கும் நல்லவனே!
இணையில்லா வல்லவனே!
இவ்வுலகம் தழைப்பதற்கே
ஈடில்லா துழைப்பவனே!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/40&oldid=1424521" இலிருந்து மீள்விக்கப்பட்டது