பக்கம்:கனிச்சாறு 5.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  33


34  தூங்காயோ பாப்பா!

அழாதே பாப்பா அழாதே!
அம்மா வருவாள் அழாதே!
எழாமல் தூங்காய் கண்மணியே!
இனிக்கும் கன்னம் உண் கனியே!

இமைகள் மூடித் தூங்காயோ?
என்றும் நற்பேர் வாங்காயோ?
அமைதி யாகக் கண்ணயராய்
அழகுத் தமிழின் பெண்ணரசி!

தாலே லாலோ லாலேலோ
தனியாய்க் கறந்த 'பசு'ப்பாலோ?
சேலோ? விழியோ? குளிர் பூவோ?
சிறுமான் கன்றே! உறங்காயோ?

கனியோ கதுப்போ உன்கன்னம்?
கற்பனைக் கனவோ உன்எண்ணம்?
பனிதோய் தாமரை இதழோ - உன்
பவளச் செவ்வாய்? தேன்கிண்ணம்!

நெற்றித் துண்டோ? பிறைநுதலோ?
நெடுங்கூர் மூக்கோ? கிளியலகோ?
சுற்றிச் சுழலும் விழி, வண்டோ?
' சூரிய 'முகமோ? பூச்செண்டோ?

கத்தரிப் பிஞ்சோ? மணிக்கையோ?
கருணைக் கிழங்கோ? குதிகாலோ?
முத்தமிழ்த் தேனோ? முரல்யாழோ?
மூவேந் தர்தம் குலக்கொடியோ?

சந்தனப் பலகை உன்னுடலோ?
சங்கொளிர் அழகோ? மென்கழுத்தோ?
செந்தமிழ் இசையோ உன்மழலை?
சிறுமயில் குஞ்சே! உறங்காயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/67&oldid=1424866" இலிருந்து மீள்விக்கப்பட்டது