பக்கம்:கனிச்சாறு 6.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  81


அருவிநீர், அழகின் பிள்ளை!
அணைந்துநீர் வீழும் இன்பத்
துருவினைக் கண்டால் உள்ளம்
உவந்திடும்! காதஞ் செல்லும்
பெருகொலி இன்பத் தெல்லை!
பெரும்புகைக் கூட்டம் போல
மருவிடுந் தென்றல் செய்யும்,
மஞ்சுகண் டுள்ளம் பொங்கும்! 3

வான்விடுங் கண்ணீர் தம்பி!
வறுமையுள் வாடுங் கூட்டம்
ஏன்எனக் கேட்கும் ஓசை!
இருந்துகேள்! அன்பின் ஊற்று,
தான்எனக் கூறு கின்ற
தண்புன லருவி யிந்த,
மானில மக்கட் காற்றும்
மாண்பினை யுற்றுக் கேட்பாய்! 4

ஒருபுறத் திருந்து சாரல்
உட்புகும் பறவைகள், மற்
றொருபுறஞ் சென்று பாறை
உயரமர்ந் திறகு தம்மை,
விரித்துடல் மீத டிக்க,
வியப்புமே லோங்கும்; துன்பம்
எரித்துடல் இளைத்தார்க் கெல்லாம்
இன்பமக் காட்சி என்பேன்! 5

மணமுழ வோசை! தென்றல்
மருவிடும் அருவிப் பெண்ணை!
தணல் வீசும் பரிதி வந்து
வானவில் மாலை சூட்டும்!
மணல் போலுஞ் சிறிய தூறல்!
மணப்பந்தர்! பறவைக் கூட்டம்,
மணக்குழு! விழுந்தெ ழுந்த
மீனினம் விருந்த வர்க்கே! 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/107&oldid=1445205" இலிருந்து மீள்விக்கப்பட்டது