உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


66

பொறுமை நிறை நிலமே!


வானப் பறவைகளே! - எழில்
வண்ண விளக்குகளே! - உயர்
மானம் பொதிந்த நல்
வாழ்க்கையினை எங்கள்
மாந்தர்க் குரைப்பீரோ?

காட்டு விலங்குகளே! - வன்மை
காழ்த்த மறவர்களே - இந்த
நாட்டினில் வாழ்கின்ற
மாந்தர்க்கும் ஓரிடம்
நல்கி உதவீரோ?

பட்டுடற் பூச்சிகளே - காற்றில்
பறக்கும் மலரிதழ்காள்! - மனங்
கெட்டுடல் நாறி,
அலைகின்ற மாந்தரின்
கேட்டை விலக்குவீரோ?

தாமரைப் பூக்குளமே! - ஒளி
தாவும் எழில் வளமே! - களி,
காமம், பொறாமை,
பகைகொள் முகங்களைக்
கமழச் செய்வாயோ?

தேனுண்ணும் வண் னமே - சுவை
தேக்கும்பாட் டாளிகளே! - எங்கள்
ஊனும் உயிருமாய்
வாழும் சோம்பேறிகள்
உழைக்கச் சொல்வீரோ?

நீந்தும்நல் மீனினங்காள்! கடல்
நீரின்நிலா, உடுக்காள்! எங்கள்
மாந்தருள் வாழ்கின்ற
தீய மனங்களை
வந்து விழுங்கீரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/122&oldid=1445382" இலிருந்து மீள்விக்கப்பட்டது