உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


நினைத்தவை எல்லாம்
நிலைத்தவை ஆகா!
அனைத்து முயற்சியும்
அரைகுறை முயற்சியே!
மனத்திருள் குறைந்தால்
மனத்துயர் குறையும்!
மனத்தொளி பெறுதலே
வாழ்க்கையின் மலர்ச்சி!

ஒளிபெற எண்ணுவாய்;
ஒளித்துவை யாதே!
வெளிவான் விரிவுபோல்
விரியட்டும் நினைவுகள்!
துளியே யாயினும்
தூய்மையே வாழ்க்கை!
களிசேர்ப் பதுவும்
கசடிலா எண்ணமே!

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு மலர்ச்சி!
ஒவ்வொரு நாளும்
ஒருபடி உயர்ச்சி!
எவ்வழி நினைவோ
அவ்வழி நிகழ்ச்சி!
செவ்விய மனமே
செவ்விய வாழ்க்கையாம்!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/150&oldid=1445419" இலிருந்து மீள்விக்கப்பட்டது