உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  125


82

துன்பமும் இன்பமும்!


துன்பம் என்பதோ மனத்துறு கோணல்!
தொல்லைகள் என்பன செயல்களின் கோணல்!
இன்பம் என்பதோ உள்ளம் இசைவது;
இனியது, எதிர்பார்த் திருந்தது கிடைப்பது!

நாம்இருக் கின்றோம் என்பதோர் இன்பம்!
நாம்வாழ் கின்றோம் என்பதோர் இன்பம்!
நாம்பெற் றிருக்கும் உடல்நலி வின்றி
நலமாய் இருப்பது மற்றுமோர் இன்பம்!

கால்முட மின்றிக் கண் குரு டின்றிக்
காதுகள் இரண்டும் கற்செவி டின்றி
நால்வகை உறுப்பும் நன்றாய் இருப்பது
நமக்குக் கிடைத்த மிகப்பெரும் இன்பம்!

மழையிற் செல்கையில் இடிவிழுந் திடாமல்,
மலையே றுகையில் உருண்டு விழாமல்,
தழைமிகு மரநிழல் ஒதுங்கி யிருக்கையில்
தடங்கிளை முறிந்தே தலையில் விழாமல்,

ஆற்றில் செல்கையில் படகு கவிழ்ந்தே
அழுந்திய நீரில் மூச்சுமுட் டாமல்,
ஏற்றிப் போகும் வண்டி கவிழ்ந்தே
இறந்துபோ காமல்,இருப்பதே இன்பம்!

உண்ணுவ தின்பம் ஒருவருக்(கு); அதுவே,
உளையாத் துன்பமாய் மற்றவர்க் கிருக்கும்!
மண்ணிடைத் துன்பமும் இன்பமும், மனத்தின்
மயக்க உணர்வென எண்ணி அமைகவே!

இனிப்பன என்றுமே இனிப்போ டிருக்கா;
இனிமை இலாதவை என்றுமே புளிக்கா;
இனிப்பதும் புளிக்கும்; புளிப்பதும் இனிக்கும்,.
இடமும் காலமும் மனத்தொடு பொருந்தியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/151&oldid=1445420" இலிருந்து மீள்விக்கப்பட்டது