உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


2

விரித்த முல்லை!


குடத்தினை இடுப்பி லேந்திக்,
குளஞ்சென்றேன் தோழி! செல்லுந்
தடத்தினில் ஒருவன் நின்று
தவித்தலைக் கண்டால், அந்த
இடத்தினில் ஒருவர்க் காக
எதிர்பார்ப்பான் போல்வான்! ஆனால்
எடுத்தெனை விழுங்குவான் போல்
ஏனவன் பார்த்தல் வேண்டும்? 1

விழியினைப் பாதை தன்னில்
விளையாட விட்டுக், கால்கள்
வழியினை வருடு மாறு
வளர்தென்னஞ் சோலை தாண்டி
எழிலினை மலர்கள் தூவும்
குளஞ்சென்றேன் தோழி! முன்செய்
பழியினை வாங்கு வான் போல்
பார்த்தேனோ வெயர்த்தல் வேண்டும்? 2

அடியினை அடிவந் தெட்ட
அவைதம்மோ டென்கண் சென்று
படியுமா றங்குச் சென்றே,
புனல் மொண்டு திரும்புங் காலென்
அடியினைத் தொடர்ந்தா னென்றெ
அஞ்சிநான் பார்க்குங் காலேன்,
குடியனைப் போல நோக்கிக்
குறுநகை சிந்தல் வேண்டும்? 3

(வேறு)


பொங்குமலை நீர்சுழித்து மடங்கி வீழ்தல்
போல் சிலிர்க்கும் தென்னோலைத் தென்றல் வாழுந்
தெங்கு மரத் தோப்பின் வழிச் சென்றே தோழி,
தெள்ளுபுனல் கொண்டுவருங் காலென் னோடு,
தங்குவதுந் தயங்குவது மாக வந்தே
தவித்திடுதல் கண்டே நான் திரும்பி நின்றேன்.
அங்குமிங்கா யவன் பார்த்தே வெயர்த்த தேனோ?
அவனுடற்பின் நடுங்குதலேன் வேண்டும் தோழி? 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/32&oldid=1445079" இலிருந்து மீள்விக்கப்பட்டது