உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


3

உள்ளம் நொந்தேன்!


“எரிதழற் பரிதிமாய்ந்து மேற்கு வானில்
இறங்கிய பின் வருக, அத்தான்” என்றே நீண்ட
சுரிகுழற் கரும்பு சொன்னாள் என்றே, தாழை
செறிந்துள்ள மடுச் சென்றேன்; காத்து நின்றேன்!
விரிந்துள்ள அவ்விருளில் மெய்யை மூடி,
வெண்முகத்தில் ஒளிபூசி நிலவுப் பெண்ணாள்
புரிந்து வரும் புன்னகையின் குளிர்மை கண்டேன்;
பொழில் மேனி வரக்காணா துள்ளம் நொந்தேன். 1

கருங்குழலைப் பிய்த்தெடுத்து வானில் வீசி,
கண்சிமிட்டும் விண்மீனில் பார்வை தோய்த்து
மருங்கெழிலைத் தென்றலிலே ஆடு கின்ற
மடுத்தாழை மலரதிலே பிழிந்து வார்த்தே,
அருங்காதல் இன்மொழியைக் கிள்ளை வாயில்
ஆடவிட்டுப், பொன்னுடலின் குளிர்மை யெல்லாம்
வருந்தென்றற் காற்றினிலே ஊற்றி விட்டு,
வார்ப் பதுமை வரக்காணா துள்ளம் நொந்தேன்! 2

“குளஞ் செல்லுங் காலென்றன் தாய் என்னோடு
கூடவரு கின்றாள்; நான் தோட்டஞ் சென்றால்,
இளந் தங்கை தனையனுப்பு கின்றார், பெற்றோர்!
எத்தனைநாள் இவ்வாறாய்த் தடைகள் வந்தே
உளஞ்சாக உடல்தேய உயிரோ மாள,
உமைக் காட்டா தெனை மாய்க்கும்? அத்தான், இன்றே
உளந்துணிந்தே விட்டேன்; செம் பரிதி மாய்ந்த
ஒருபொழுதில் ஓடிவருகின்றேன்” என்றாள்! 3

கடைக்கண்ணில் நீர்வடிய உதட்டின் செம்மை
கருக, உளஞ் சோரவுடல் வாட, “அத்தான்,
படை திரண்டு வந்தாலும், தந்தை என்னைப்
பழிவாங்க முனைந்தாலும், வீட்டில் பூட்டித்
தடைசெய்து வைத்தாலும், தணியாக் காதல்
தணிக்க வரு கின்றேன் நான்” என் சொல்லி,
விடைபெற்ற மின்னலிடை வருவாள் என்று
விடியும்வரை, காத்திருந்தே உள்ளம் நொந்தேன்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/34&oldid=1445080" இலிருந்து மீள்விக்கப்பட்டது