உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  9


“தாயருகில் படுத்துக்கண் காணித் தாலும்
தடைசெய்யத், தந்தை, கத வருகே சென்று,
பாய்போட்டுப் படுத்தாலும், உள்ளக் காதல்
பாய்ந்துவரின் நானெதற்கேன் அஞ்சல் வேண்டும்?
காய்கதிரோன் அவிந்தவுடன் குளிர்ந்த தென்றற்
காற்றடிக்குந் தாழைமடு மணலின் மேட்டில்
போயிருங்கள் அத்தான்! இப்பொழுதே நான்
பூங்காதல் மொழிபயில வருவேன்” என்றாள்! 5

பொன்மேனிச் செம்பரிதி மேற்கு வானில்
போய்த் தொலைந்தான்; பூரித்துச் சென்றேன்; இன்பத்
தென்றற்பெண் வந்திருந்தாள்; நிலவு வந்தாள்;
தெள்ளியநீர்த் தேக்கத்தில் முல்லைப் பெண்ணாள்
என்றன் வர வறிந்துடலம் நாணி நின்றாள்;
என்னபயன்? இரவெல்லாம் காத்தேன்; உள்ளம்
வென்றவளைக் காணவில்லை! துடித்தேன்; நெஞ்சின்
விழிப்பாவை காணாதென் உள்ளம் நொந்தேன்! 6

-1948
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/35&oldid=1445081" இலிருந்து மீள்விக்கப்பட்டது