உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


4

இதுதான் காதல் கூத்தோ?


மருந்தாலும் தீராத மனநோய் உன்றன்
மலர் முகத்தின் குளிர் விழியால் மாயும்; வானப்
பருந்தாலும் இயலாத கூர்ந்த பார்வை!
பணிவு மொழி! கனிவிரக்கம் இவற்றோ டன்பு
விருந்தாலும் நீ என்னை மகிழ்விக் கின்றாய்!
வேறுபலர்க் குன்னைவிட அழகா இல்லை?
இருந்தாலும் நான் உன்னை விரும்பு கின்றேன்!
இதுதான் நற்காதல் எனும் இனிய கூத்தோ?

தண்ணீரில் தோய்த்தாலும் தணியா வெம்மைத்
தழல் பாய்ச்சும் நெஞ்சரங்கில் உன்னைப் பற்றி
எண்ணம் வரின் பனிமலையின் குளிர்மை தோயும்!
யான் காணும் பாவையர்பால் உனக்கிருக்கும்
கண்ணமைப்பா இல்லை? முக நிலவா இல்லை?
கார் குழலில் ஒளியிலையா? இருந்தா லும்நீ
பெண்ணமைப்பில் வான் உச்சி! அழகே! உன்றன்
பித்தந்தான் காதல் எனும் மகிழ்வுக் கூத்தோ?

மூடாத விழிக்குள்ளே ஒளியாய் நின்றாய்!
மூச்சுக்குள் இயங்கு கின்றாய்! உள்ளத் தேறி
ஆடாத வகையாடி அதிர்வு செய்வாய்!
ஆயிரம்பேர் நின்றாலும் அணங்கே உன்னைத்
தேடாத முன் வந்து தோற்றஞ் செய்வாய்!
தோயாத நிழல்போலத் தொடர்வாய்! உன்னைப்
பாடாத நாளுண்டோ? பாவாய்! உன்றன்
பற்றுத்தான் காதல் எனும் ஆடாக் கூத்தோ?

எங்கேயோ நான் பிறந்தேன்! நீ பிறந்தாய்!
இமிழ் கடலின் ஒளிமுத்தம் பொற்கம் பிக்குள்
தங்குவது போல் ஒன்றிப் போனோம்! ஆயின்
தனியா நீ பேருலகில்? உனக்கு முன்னம்
மங்கையரை நான்பார்த்த திலையா? உன்போல்
மற்றவரேன் ஈர்க்கவில்லை? உனக் கிருக்கும்
திங்கள் முகம் என் உளத்தில் தோய்ந்த தேன்? அத்
தோற்றந்தான் காதல் எனும் அழியாக் கூத்தோ?

-1950
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/36&oldid=1445082" இலிருந்து மீள்விக்கப்பட்டது