உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


18

குழந்தை வேண்டும்!

முழுமை நிலவின் ஒளியி லமர்ந்து
முழக்க முழக்க இனிக்கும் தமிழில்
வழுவில் அன்பை வார்த்துக் குழைத்து
வடித்துக் கூறும் கணவர் பேச்சில்
பழுதில் இரவுப் பொழுது பறக்கும்!
பகலிற் பொழுதெவ் வாறு கழியும்?
அழுதிட ஒரு குழந்தை வேண்டும்
அழுதிட ஒரு குழந்தை!

தணலும் செம்மை பரிதிச் சூட்டைத்
தணிக்கும் நிலவின் ஒளியைப் போல,
உணவைச் சமைக்க, உறுத்தும் விழியின்
உள்ளும், புறமும், குளிர்மை காண,
மணலைக் கூட்டி மகிழும் மகவின்
மறைக்கும் முடியை ஓடி ஒதுக்கி,
அணைத்திட ஒரு குழந்தை வேண்டும்
அணைத்திட ஒரு குழந்தை!

ஊற்றி வைத்த பாலைக் குடித்தும்,
ஒருசுவை பெறாமல், மாலை
ஏற்றி வைத்த விளக்கை இறக்கி,
ஏறிப் படுக்கும் கணவர் மருங்கில்,
மாற்றி மாற்றிப் பெற்ற முத்தங்கள்
மாய்ந்தா போகும்? பகலில் நினைத்து
நாட்டிட ஒரு குழந்தை - வேண்டும்
நாட்டிட ஒரு குழந்தை!

அணிகள் பூட்டி அழகு கூட்டி
அரைத்த சந்தனம் குழைத்துப் பூசிப்,
பணிவின் விளக்கைப், பசுமைத் தாய்மைப்
பண்பின் ஒளியைப் பயிலப் பயில,
தணிவு காட்டி மழலை பேசித்
தனிமைக் காட்டில் இனிமை சேர்க்க
மணியென ஒரு குழந்தை வேண்டும்
மணியென ஒரு குழந்தை!

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/54&oldid=1445105" இலிருந்து மீள்விக்கப்பட்டது