உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  29


19

பாவலன் காதலி!


உன்னை, இவ் வுலகத்தின் அழகுள்ள பொருள்களில்
ஒன்றாக நான் உணர்ந்தேன்!
உருவற்ற தென்றல்,உன் மூச்சினுக் கிணையென்றே
உண்மையாய் நான் அறிந்தேன்!
நின்னை, நின் அழகினை, நெஞ்சத்தின் அன்பினை,
நிலையென்று நான் நினைத்தேன்!
நிலைபெயர்ந் துலவிவரும், வெண் பளிங்குச் சிலையென்ற
நினைவினில் மகிழ்ந்து நின்றேன்!
என்னை, என் நினைவினை, என்றென்றும் குளிர்விக்கும்,
எழிலென்று நின்னை எண்ணி,
எட்டாத நினக்காக ஏங்கித் தவித்தவா
றிருந்துபல பாடல் கற்றேன்;
பின்னை, நீ நெருங்கினாய்; பேரழகு மறைந்தது! உன்
பித்தத்தை நானுணர்ந்தேன்;
பேதையே! நின்னுடலை நான் வேண்டேன்! விலகிநில்!
பிணையுமுன் அழகு காண்பேன்!

ஒளிவிடுங் கண்ணாடிக் கருவிழியின் உட்புறத்தில்
ஊறுகின்ற சொற்களெல்லாம்,
உணரநான் அருகுவர, விழிமூடிக் கொள்கின்றாய்!
உன் நோக்கம் நான்விரும்பேன்;
நெளிவிழும் நெற்றியும், நினைவூட்டும் விழிகளும்,
நின்னிரு மென்கன்னமும்,
நீயறிய மாட்டாத எண்ணத்தை எனக்கூட்டும்;
நெருங்கிவிடில் மாய்ந்து போகும்!
கிளியல கொத்த நின் கீற்றிதழ்த் துடிப்பினைக்
காணவே விரும்பு கின்றேன்!
கிளத்தாத மொழிகூறி மையல்மே லேற்றாதே;
கனவுகளை வாழ வைப்பாய்!
களிமிகும் உணவுக்கு வித்திடுக! காதலியே,
கருத்தினுக் கெரு வுன் எழிலே!
கலையாத ஓவியமே! அழகே! நான் நின்னழகைக்
கைக்கொள்ள விரும்பவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/55&oldid=1445106" இலிருந்து மீள்விக்கப்பட்டது