உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 கனிச்சாறு – ஆறாம் தொகுதி

விழிகளில் மொய்த்திடும் அழகுக்கு முத்தமிடில்,
வெறி மூளும்! அழகு சாகும்!
வெவ்வேறு பேரழகும், ஒன்றாகி மதுவுண்ட
வெறியனாய் மயங்கி நிற்கும்,
வழிகளில் உன்னைநான் வாவென் றழைக்க வில்லை!
வனப்பே! நின் அணைப்பு வேண்டேன்!
வளர்கொடிக்கு நிகரான இடையே! நான் நின்னிடையில்
வாழ்கின்ற அழகை விரும்பி,
கழிபெருகும் வேட்கையால், கற்பனையில் வாழ்கின்றேன்!
கனவினுக் கணையிடாதே!
கானத்துக் குளிர்உருவே, அழகுக்கு மையலெனும்,
கருந்திரையைக் கட்டி டாதே!
அழிவாகும், உடலுணர்வு! பேரொளியே! ஒருங்கமைந்த
அழகுசேர் பிழம்பே! என்னை,
அணையாது துடிக்க வை! அணுகாது கதறவை!
அலையலையாய்ப் பாடல் காண்பாய்!

முத்தமிட்டு, முத்தமிட்டு, முயக்கத்தில் ஆழ்த்தாதே!
முகங்காட்டி எனையாட்டிவை!
மொய்க்குமுன் விழிபருக,எட்டிநில்! என்னுளத்தில்,
மூள்கின்ற பாடல் காண்பாய்!
கத்தவிட்டுக் கத்தவிட்டு, வேடிக்கை பார்; அந்தக்
கதறலைப் பாடலாக்கிக்,
காதலியே! உன்னையென் கற்பனையில் சேர்க்கின்றேன்!
கனிச்சாறே! ஒளியுருவே நீ!
இத்தரையில் நில்லாமல் என்னோடு பறந்துவா!
எங்கெங்குஞ் சுற்றி வருவோம்;
இறவாத புகழுக்கே, என்னை நீ கொண்டுசேர்!
என்னருகில் நிற்க விரும்பு!
பித்தரை, மூடரைப் போலென்னை நினைந்து நீ
பிணைக்க வெனை அணைந்திடாதே!
பின்னே நீ நகர்ந்துபோ! பிடியினுக் கெட்டாதே!
பீறிவரும் பாடல்களைப் பார்!

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/56&oldid=1445108" இலிருந்து மீள்விக்கப்பட்டது