உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  31


20

அழகு எது?


நீந்தும் கடலலை போல - நின்றன்
நெற்றிப் பிறையிலும் தோளிலும் தூங்கும்,
கூந்தல் அழகென்று கூறேன் - செம்மைக்
கோவை இதழ்களில் மொய்த்திடுங் கூத்தை
ஏந்தும் அழகென்று கூறேன் - அடி!
என்னை நடத்திடும் நின்னுளத் தன்பில்
காந்தும் பணிவையும், சொல்லின் - இன்பக்
கனிவையும் அழகென்று கூறி வியந்தேன்!

எண்ணில் ஓராயிரம் கூத்தை - நின்றன்
இன்சொல்லைப் போல்எனக் கென்று முணர்த்தும்
கண்ணை அழகென்று கூறேன் - ஒளிக்
கன்னத்தை எழிலென்று கருதவும் மாட்டேன்,
விண்ணை அணைத்திடும் மின்னல் -வந்து
வீழ்ந்த நிலையினை இடையென்றுங் கூறேன்,
பண்ணைப் பழித்திடும் சொல்லால் - அன்பைப்
பருகெனத் தந்ததை அழகென்று கண்டேன்!

வில்லைப் பழிக்கின்ற புருவம் - என்று
வியந்தது மில்லை; உன் மலரிதழ் கூட்டும்
சொல்லைப் புகழ்ந்தவன் அல்லன்! - வெள்ளைச்
சுண்ண நிறத்தினில் முல்லையம் பற்கள்,
இல்லை; எனை ஈர்த்த தில்லை! - அன்னைக்
கெதிரான அன்போடு என்னை யழைத்து
வெல்லத் தமிழ்மொழி பேசி - நெஞ்சில்
விளக்கொளி ஏற்றிய மாண்பை வியந்தேன்!

-1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/57&oldid=1445109" இலிருந்து மீள்விக்கப்பட்டது