உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


23

பிரிவுத் துன்பம்


அன்புள்ள என்னத்தான்! பிரிந்து சென்றீர்!
ஆழ்ந்துள்ள பெருங்கடலின் துன்பந் தன்னில்,
முன்பறியாப் பெருங்காட்டின் நடுவில், வானை
முட்டுகின்ற மலைமீதில், தனிமைச் சேற்றில்,
என்பதனைத் துளைக்கின்ற வாடைக் காற்றில்,
இனுஞ் சொன்னால், சாவினது மடியில், வாழும்
மன்பதைக்கு வெகுதொலைவில் விட்டுச் சென்றீர்!
மறந்துவிட்டீர்! மறக்கவில்லை என்றன் நெஞ்சம்! 1

பொருள்தேடச் செல்கின்றீர்! ஆனால் அன்பின்
பொருளுணரா திருக்கின்றீர்! துன்பம் என்ற
இருள்வந்து போர்த்துவிட்ட தத்தான்! நீங்கள்
எழுதிவிட்டீர், “நெஞ்சுறுதி கொள்வாய்” என்றே!
அருள்வேண்டிப் பின்வந்து விட்ட தத்தான்,
அந்நொடியே என்நெஞ்சும்; நெஞ்சிங் கில்லை!
வருகைக்குக் காத்திருக்கும் விழிகட் கென்னை
வாட்டுகின்ற தன்மையுண்டு! தேற்றல் இல்லை! 2

நீர்க்குடத்தைத் தூக்குகையில் உங்கள் எண்ணம்!
நினையாமல் இருப்பதற்கு முயற்சி செய்வேன்!
பார்க்குமிடம் எங்கணுமே அமர்ந்தி ருப்பீர்;
பழையகதை, உங்கள்குரல் நெஞ்சைச் சுற்ற,
ஊர்க்கிணற்றில், பெண்களெல்லாம் என்னைக் கண்டே
உதடவிழ, நகையுதிர்க்க நிலைத்து நிற்பேன்!
ஆர்க்கிடையில் உங்கள்முகம் இல்லை; உங்கள்
அழகுமுகக் கண்களிலே நான்தான் இல்லை! 3

உயிரெல்லாம் அங்கென்றன் உடல்தான் இங்கே!
உணவில்லை; உறக்கமில்லை அத்தான்! வாழும்
பயிருண்டோ நீரின்றி! என்றன் உள்ளம்
படும்பாடு நீர்பட்டால் வருவீ ரன்றோ!
அயரும்வரை உடல்வருந்தி வேலை செய்தும்,
அரைநொடியும் கண்மூடி அயர்வ தில்லை!
பெயருக்கேன் வருந்துவதாய்க் கடிதம் தீட்டிப்
பேரரச மரத்துக்கல் லாகி விட்டீர்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/62&oldid=1445118" இலிருந்து மீள்விக்கப்பட்டது