உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  39


26

அத்தானின் குறும்பு!


கொத்தான மலரினைக்
குழலினில் வைத்தான்! - பின்
குனிந்தென்னை முத்தமிட்டான்! - என்
அத்தானின் குறும்பிது தோழி!
ஆனாலுமவன் அன்பின் செயல்தானடி!

பித்தாக எனையாக்கி
விட்டான்என் பின்னலினைப்
பிடித்திழுத் தாட்டிவிட்டே - நான்
கத்தாம லிருக்க அவன்
கையாலென் வாய்மூடிக்
கன்னத்தைக் கிள்ளி வைத்தான்! - என்
அத்தானின் குறும்பிது தோழி!
ஆனாலுமவன் அன்பின் செயல்தானடி!

பித்துப் பிடித்தேனடி! - அவன் மார்பில்
புரண்டு மகிழ்ந்தேனடி!
கொத்துக் கிளிபோலே - என்னிதழைக்
கவ்விச் சுவைத்தானடி!
கையால் முகமேந்தினான்! - என்னுளத்தைக்
கண்ணால் அவன் காந்தினான்!
மெய்யெலாம் தீண்டிவிட்டான்!
அன்புளத்தின்
மேன்மைதனைக் காட்டிவிட்டான்! என்
அத்தானின் குறும்பிது தோழி!
ஆனாலுமவன் அன்பின் செயல்தானடி!

பின்னல் இழுப்பதுமாய் - மேல்துகிலைப்
பற்றி இழப்பதுமாய்
இன்னல் கொடுத்தானடி உள்ளஞ்சொல்
ஏவல் புரிந்தானடி! - என்
அத்தானின் குறும்பிது தோழி;
ஆனாலுமவன் அன்பின் செயல்தானடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/65&oldid=1445125" இலிருந்து மீள்விக்கப்பட்டது