உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  51


38

வாங்க அத்தான்!


அத்தான்! என் உள்ளத்தில் பொங்கும் ஆசை
அத்தனையும் உள்ளடக்கிக் கூறுகின்றேன்;
தித்திக்கும் ஒருசெய்தி! நீங்கள் தந்த
தெவிட்டாத இன்பத்தின் விளைவே! ஆமாம்
முத்துக்கும் ஒளியில்லை என்னு மாறு
மொய்விழிகள்; சிறியநுதல்! இன்ப வெள்ளம்!
ஒத்திருக்கும் உங்கள்உரு; ஆமாம் அத்தான்!
உணர்ந்தீரா யாரென்றே? நம்மின் செல்வம்! 1

போங்க’த்தான்! உங்கட்குப் புரிய வில்லை!
பிறந்துவிட்டான் உங்கள்மகன்! அவனைக் காண
வாங்க’த்தான்; வார்த்தெடுத்த - தங்கப் பாவை!
வைத்தகண் வாங்காமல் எனைப்பார்ப் பீரே!
நீங்கத்தான் விடுவீரா? அதுபோல் என்னை
நீலவிழி எடுக்காமல் நோக்கு கின்றான்!
ஏங்க’த்தான், அசையாமல் இருக்கின்றீர்கள்?
எடுத்தடியை வையுங்கள்! இருப்பீர் இங்கே! 2

பூத்திருக்கும் அழகுமலர் தன்மேல் மொய்க்கும்,
புதுவிழிகள்! எனக்காக, அத்தான் நீங்கள்,
காத்திருக்கும் வகைபோலக் கோவை வாயைக்
காட்டியவா றெப்போதும் துடித்து நிற்பான்!
ஆர்த்திருக்கும் இருகையும், காலும், வாயும்!
அப்படியே உங்களைத்தான் ஒத்தி ருக்கும்!
பார்த்திருக்கும் போதெல்லாம் உங்கள் எண்ணம்,
பறந்துவிடும்! ஆனாலும் அண்டும் மீண்டும்! 3

இன்னொன்று கேளுங்கள் அத்தான்! என்னை
இடையிடையே மறந்தபடி அமைதி பூண்டே
இன்னொன்றைத் தேடுகின்றான்! நேற்றே என்தாய்
இதைச்சொன்னாள்! உங்களைத்தான் தேடு வானாம்!
‘தின்’னென்று கன்னத்தைக் கனிவாய் தன்னைத்
தருவானாம் உங்கட்கே! சொன்னான் என்பால்!
பின்னென்ன, வாருங்கள் அத்தான்; உங்கள்
பையனையே கொஞ்சுங்கள்; வேண்டாம் என்னை! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/77&oldid=1445144" இலிருந்து மீள்விக்கப்பட்டது