உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


40

அன்று போல் இல்லை....!


ஓடி ஒளிந்துன் ஒளிமூழ்கி ஒண்டமிழிற்
பாடிக் கதைசொல்லிப் பாங்கியரோ - டாடினமே,
அன்றுபோ லில்லை அணிநிலவே; நீளிரவில்
நின்றிறைக் கின்றாய் நெருப்பு 1

வண்ணச்சிற் றாடையொடு வாயிற் குதித்திறங்கி
மண்ணிற்சிற் றில்ல மருங்கமர்ந்தே - உண்ணுவமே
அன்றுபோ லில்லை அணிநிலவே; மூண்டெரிதீக்
குன்றுபோ லானாயோ கூறு. 2

தேங்கிக் கிடக்கும் இரவின் குளிரொளியில்
தூங்கிக் கிடந்தோமே தண்ணிலவே - ஆங்கதுபோல்
இன்றில்லை; என்னை எரிக்கொழுந்தாய் வாட்டுகின்றாய்
நன்றிதுவோ என்செய்தேன் நான். 3

எம்மின் இளையார் இனியகுரல் தாமிசைக்கக்
கும்மி யடித்துவந்த கோதையினுக் கன்று
விருப்பாகி நின்றாயே வெண்ணிலவே! இன்றேன்
நெருப்பாகி நிற்கின்றாய் நீ! 4

முத்தை இறைத்த முழுநீலக் கம்பளத்தில்
தத்தி நடைபயிலும் தண்ணிலவே! பாலொளியைப்
பாய்ச்சுகின்றா யில்லை பருநெருப்பை வாடையிலே
காய்ச்சுகின்றாய் இன்று கனன்று! 5

-1958
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/80&oldid=1445150" இலிருந்து மீள்விக்கப்பட்டது