உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  55


41

தோழியின் அன்பு!


இருகண்கள் வீழருவி எரிபோலுஞ் சிவப்ப,
ருங்குழலோ புயல்பாய்ந்த முகில்போலுஞ் சிதைய,
முருகவிந்த தாமரைபோல் இதழ்நுனியும் கறுப்ப,
முத்திழந்த சங்காகி மணிக்கழுத்தும் தாழ,
அருகலைந்த வகைபோலும், ஆடுகொடி போலும்,
ஆசையெனும் பெருவளிக்குச் சிற்றிடையும் ஒசிய,
பருகுபுனற் கலையுமொரு பாவையிள மான்போல்,
பசிமடிந்தாள் இவளொருத்தி
‘பார் பார்’என் றுரைத்தாள்.

தாயிழந்த சேயாகித் தனித்தழுகும் இளையோள்!
தருமுணவை முப்பொழுதும் தள்ளுகின்ற கையோள்!
வாயிழந்த புழுவெயிற்கு வாடுகின்ற வகைபோல்,
வனப்பிழந்து, காதலெனும் கடுவெயிற்குச் சுருண்டே
பாயிழந்த வெறுந்தரையில் படுத்துருளும் மெய்யோள்!
பனிநிலவும் காய்ச்சுதெனும்
பான்மையுளங் கொண்டோள்!
காயிழந்த மரம்போலக் களையிழந்த மயில்போல்
கண்ணுறங்கா ளிவளொருத்தி
‘காண் காண்’என் றுரைத்தாள்!

உரைத்தவளின் அன்புமொழி உள்ளம்போ யுருக்க,
உண்மையெனுங் குன்றேறி நின்றனவாய் என்னை,
நுரைத்த புளிங் கள்ளருந்தி நிற்பானைப் போல
நோக்கினான்! நோக்கியென் னுறுதியினை அன்பால்,
கரைத்தவனைப் போல்நெருங்கக் கழன்றதடி நாணம்!
கணப்பொழுதில் அருகிருந்த தோழிமறை வானாள்!
அரைத்திடுநற் சந்தனம்போல் குளிர்ந்ததடி உள்ளம்!
அணுஅணுவாய் வளர்ந்துமலை யானதவன் அன்பே!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/81&oldid=1445160" இலிருந்து மீள்விக்கப்பட்டது