உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


49

மறப்பரோ?


காட்டு வழிகடந் தென்னைக் கண்டதும்
கைகள் நீட்டி அணைத்ததும்
வாட்டு வாடையில் இருளில் அமர்ந்தவர்
வன்சொல் பற்பல உரைத்ததும்
கோட்டு மலரினைக் குழலில் வைத்ததும்
கூம்பு மலரிதழ் சுவைத்ததும்
நீட்டு கையடித் துண்மை செய்ததும்
நினைப்ப ரேயெனில் மறப்பரோ?

உச்சி முகர்ந்ததும் ஊன்று விரல்களில்
ஒப்பனைக் குழல் அளைத்ததும்
எச்சி லுண்கனி சுவைத்ததும் அணைத்
திருகை பொன்வளை யிட்டதும்
கச்ச விழ்த்து முடித்ததும், அவர்
கைக ளால்விழி போர்த்ததும்
நச்சி இளமையின் நலஞ்சு வைத்ததும்
நனவென் றாலெனை மறப்பரோ?

மண்டு குளிரினில் மணலின் பரப்பிலென்
மடியில் அவர்தலை புரண்டதும்
பண்டு பாவலர் மொழிந்த அகத்திணைப்
பாடல் கட்குரை கண்டதும்
தண்டு மலரடி நோமெனச் சொலித்
தடுத்தும் கால்களைப் பிடித்ததும்
உண்டு மகிழ்ந்ததும் ஊட்டி உவந்ததும்
உணர்வ ரேயெனில் மறப்பரோ?

விரிந்த மாமர வேர்த டுத்தெனை
வீழ்த்ததும் உளந் துணுக்குற
பரிந்தெ டுத்தெனை இறுக அணைத்ததும்
பாழ்த்த வேரை அகழ்த்ததும்
பிரிந்தி டில்உயிர் பிழைத்த லிலையெனப்
பேசி இல்வரை வந்ததும்
புரிந்த நாடகக் குறும்புக் காட்சிகள்
பொய்க்கு மோ,எனை மறப்பரோ?

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/90&oldid=1445175" இலிருந்து மீள்விக்கப்பட்டது