பக்கம்:கனிச்சாறு 7.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  57


42

தீதிலாது இனம் ஆற்றுவேன்!


தூய்மை யான, ஓர் உளத்தினை - ஒளி
துலக்க மான, ஓர் அறிவினை,
வாய்மை யான, ஓர் உணர்வினை - ஒரு
வளப்ப மானநன் னெறியினைச்
சேய்மை யான, ஓர் இயல்பினை மிகச்
சிறந்த தான, ஓர் உயிரினை,
நோய்மை யானஇத் தமிழர்கள் - தொலை
நோக்கு வார்என நினைத்திலேன்!

காணு மாறொரு தாழ்வினை - அறக்
களையு மாறொரு கடமையை,
நாணு மாறொரு நேர்மையால் - அட
நானும் நலிவுற ஆற்றினேன்!
வேணு மாறிவண் தமிழர்கள்! - அதை
விளங்கி னாரெனக் கருதிலேன்!
பேணு வாரென நம்பிலேன்! - எனில்
பின்னும் அதனையே செய்குவேன்!

குற்றங் குறைகளும் சாற்றுவார்! - யான்
கூறும் கூற்றையும் மாற்றுவார்!
தொற்றும் மடமையில் உழலுவார்! - ஒரு
தோழமை உளம் அறிகிலார்!
கற்றும் கலாதவர்போலவே - பெருங்
கயமை செய்வரை நம்புவார்!
மற்றும் யான்எனச் செய்குவேன் - மன
மாசி லா(து)இனம் ஆற்றுவேன்!

உண்மை யிலாதவர் நம்புவார் - ஓர்
உண்மை உளத்தினை நம்பிலார்!
வெண்மை உரைகளைப் பற்றுவார் - தூய்
வெள்ளை நெஞ்சினை எற்றுவார்!
பெண்மை மனமென ஐயுற - ஒரு
பேதை போலெனைப் பேசுவார்!
திண்மை தவித்திடல் அல்லனாய் - ஒரு
தீதி லா(து)இனம் ஆற்றுவேன்!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/102&oldid=1446097" இலிருந்து மீள்விக்கப்பட்டது