பக்கம்:கனிச்சாறு 7.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  75


59

பிறந்தநாள் நினைவிலோர்
பெருமையும் இல்லை!


திறந்தநல் மனத்தொடு தெரிவிக் கின்றேன்,
தீந்தமிழ் மொழி, இனம், நாடு
சிறந்துசீர் விளங்குநாள் சிறந்தநாள் எனக்கு!
சிதைவுறும் நாளெலாம் தீநாள்!
பிறந்தநாள் நினைவிலோர் பெருமையும் இல்லை!
பிறந்துவாழ் நோக்கமே பெரிது!
மறந்தநம் மொழியையும் மடிந்தநம் இனத்தையும்
மலர்த்தி, நம் நிலம்பெறல் வாழ்வே!

(வேறு)


முன்னே போய்க்கொண் டிருக்கின் றேன்;ஒரு
முழமே சறுக்கி விரற்கடை ஏறினும்
பின்னே திரும்பி, நான் பார்த்திடேன்; உடல்தரும்
பிணிகளைத் தடைகளைப் பொருட்டென எண்ணிடேன்!
என்னேர் உயிரினை இழப்பினும் தயங்கிடேன்;
ஏற்றுள கொள்கையே பெரிதென் றியங்குவேன்!
அன்னை மொழி, இனம், நாட்டினை எதிரிகள்
ஆள்வதை மீட்டிடும் வரை, விழி உறங்கிடேன்!

இம்மா நிலந்தனில் எண்ணிலா ஏழைகள்,
ஏற்றத் தாழ்வுகள் எங்கணும் இருக்கையில்
சும்மா இருந்திட மனம்வர வில்லையே!
சொகுசாய் வாழவும் அறிவிசைந் தில்லையே!
எம்மா நிலத்தையும் இனத்தையும் மொழியையும்
எத்தனை முயற்சிகள் செய்தே ஆயினும்
வெம்மாப் பெரும்படை நடத்தியே ஆயினும்
விடுதலை செய்வதே உலகில்,என் வேலையாம்!

-1994
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/120&oldid=1446169" இலிருந்து மீள்விக்கப்பட்டது