பக்கம்:கனிச்சாறு 7.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


62

காய்ச்சல் என்னை மேய்ச்சல் கொண்டது!


கெடாத என்னுடல் கெழுநலம் குன்றி
விடாத காய்ச்சலால் வெடவெடக்கும் குளிரால்
திண்மை யிழந்தும் தேய்ந்தும் நலிந்தும்
அண்மையில் பலநாள் அழற்சி யுற்றுப்
படாத துன்பத்தால் படுத்தே கிடந்து!

‘தடா’வும் ‘மிசா’வும் வீழ்த்தாத என்னை
அடாத காய்ச்சல் அடியொடு சாய்த்தது!
எடாத வாந்தியால் என்னுயிர் இளைத்தது!

உழைத்துழைத் தே,உருக் குலையாத என்னுடல்
இழைத்த தசையிலும் எலும்பிலும் மூட்டிலும் 10
மிதிமிதி என்னும் வலிகளால் மெலிந்தது!
புதுப்புது நோவுகள் உடலுள் புகுந்தன!
வயிற்றினுள் எரிச்சல் வறுத்தது குடலை!
மயிர்க்கால், கை, கால், மனம், உடல் காந்தின!
என்றும் நோய்எனை எதிர்த்ததே இலை, என
அன்று போலவே அகந்தைகொண் டிருந்தேன்!

‘இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு’, எனக் கூறிய
திருவள் ளுவரும் தீய்க்கும் காய்ச்சலால்
கருவழிந் தேதான் கழறிஇருப் பாரோ? 20

ஈழஏ திலிகள் இன்னலம் காக்க
ஈழ வேந்தனை என்னோடு கூட்டி
உடுமலைப் பேட்டையில் உயர்தன் மானன்
கடுமையாய் முயன்றஓர் கடமை நிகழ்ச்சிக்கு
இருவரும் சென்றோம்! இடையில் திண்டுக்கல்
நெருங்கிடக் காய்ச்சல் நெருப்பு மூண்டது!
கழராம்பன், வேனில் கனிந்தஅன் பில்லத்தில்
எழவிய லாமல் ஈழ வேந்தனை
நிகழ்ச்சிக் கனுப்பி இருநாள் நின்று
திகழ்சென் னைக்கே ஈகையோடு திரும்பினேன்! 30
ஏறத் தாழ முப்பது நாள்கள்
ஆறத் தாழா அனலில் உருகினேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/123&oldid=1446172" இலிருந்து மீள்விக்கப்பட்டது