பக்கம்:கனிச்சாறு 7.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


78

பாவாணர் தாத்தா தெரியுமா?


பன்மொழி கற்றவர்
பைந்தமிழ்க் குழைப்பவர்
பாவாணர் தாத்தா தெரியுமா? - தம்பி
பாவாணர் தாத்தா தெரியுமா? - அவர்
தென்மொழி ஆய்விலும்
தனித்தமிழ் வாழ்விலும்
திகழ்கின்ற ஞாயிறு புரியுமா?

அறிவினில் சிறந்தவர்!
அன்பினில் மிகுந்தவர்!
அருந்தமிழ் இலக்கணக் கடலவர் - ஒளி
அழகுசேர் கருநிற உடலவர்! - அற
நெறிபிற ழாதவர்!
நிலைகுலை யாதவர்!
நெடுவாடைக் காற்றுக்குப் படலவர்!

பலநூல்கள் யாத்தவர்!
பண்பாடு காத்தவர்!
பதவியைத் தூசென மதிப்பவர் - பொய்ப்
பாராட்டைக் காலினில் மிதிப்பவர்! - இந்த
உலகினில் முதன்மொழி
ஒண்டமிழ் மொழியென
உரைத்தவர்; தீங்கெனில் கொதிப்பவர்!

துன்புற்ற போதிலும்
துவளாத உளத்தவர்!
தொடங்கிய கொள்கையை முடித்தவர்! - திறந்
தோய்கின்ற நூல்பல வடித்தவர்! - நாம்
இன்புற்று வாழ்ந்திட
இராப்பகல் உழைப்பவர்!
என்றுமே நமக்கெலாம் பிடித்தவர்!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/149&oldid=1446206" இலிருந்து மீள்விக்கப்பட்டது