பக்கம்:கனிச்சாறு 7.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  127


92

இக்காலத்துப் புல்லிசையும்,
சுந்தரேசனார்தம் நல்லிசையும்!


இக்காலை மேவும் இசைநயத்தைக் கேட்பதற்குச்
செக்காடும் ஓசை சிறப்பெனலாம்! - அக்காலை
தக்க குருவழியாய்த் தாம்பயி ல்வார்! இக்காலை
திக்காலுக் கொன்றறிவார் தேர்ந்து! 1

பண்ணறிந்து தாளம் பயில்வறிந்து நல்லிசைமேல்
விண்ணென் குரலால் விளங்கும், அன்று! - மண்ணுதிரும்
மொத்தைச் சுவரடிபோல் மொத்தும் முழவடிக்குக்
கத்தலே நல்லிசை, இக் கால்! 2

சொல்லும் பொருளுமொரு சோர்வின் றிசையோடு
செல்லும்; மனம்செவியில் சேரும், அன்று! - கல்லோ
டொருபதமு மின்றிச்சோ றொன்றிரண்டாய் வெந்த(து)
இருபதாம் நூற்றாண் டிசை! 3

வானரமும் வந்தமரும்; வல்லரவந் தான்மயங்கும்;
ஏனற் புனத்தினற்றை இன்னிசைக்கே! - ஆனேறிங்(கு)
ஆவுக்குக் கத்தும் அனற்றல்போல் இக்காலை
ஈவுக்குக் கத்தல் இசை! 4

பக்கலிசை ஊடியொரு பக்கம்போம்; பாடுபவர்
முக்கலிசை தாளத்தை முட்டிநிற்கும்; - கக்கல்போல்
எக்கல் எடுக்கல் இரைக்கலெனும் ஓசையைத்தான்
இக்கால் இசையென்பார் இங்கு! 5

தேர்ந்தவிசை வேண்டின் தெலுங்கிசைதான்! மற்றெங்கும்
ஆர்ந்தவிசைக் கிந்திதான்ஆட்சிசெய்யும்! - ஏர்ந்தொருகால்
நல்லவிசை கேட்குமெனில் நல்லதமிழ்ப் பண்ணிருக்கும்;
சொல்லோ சமற்கிருதச் சொல்! 6

இரைப்பெடுத்த ஓசை! இழுப்பெடுத்த கூச்சல்
வரைப்படுத்த ஆகா வசையாம்! - திரைப்படத்தின்
பாடலைத்தான் சொன்னேன்; பயின்றுவரும் பாடலுக்கோ
ஆடலைத்தான் கண்டே அறி! 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/172&oldid=1446240" இலிருந்து மீள்விக்கப்பட்டது