பக்கம்:கனிச்சாறு 7.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  167


எனைப்போற்ற வில்லை இந்த
இனமும்,இந் நாட்டரசும்
என்றே நித்தம்
முனைப்புற்ற ஏக்கத்தால்,
முட்டிவரும் கண்ணீரால்,
முதிர்ந்த அன்பால்,
நினைப்புற்று நினைப்புற்று
நீயும்நின் அக்கை, அண்ணன்,
இனவோ ரோடும்,
சினைப்புற்று நுமையுயிர்த்துச்
சிறந்தஅன்னை துயர்வதெல்லாம்
சிந்தை நேர்வேன்!

எனைப்பற்றி நினைப்பதில்லை,
இளமைமுதல் இன்றுவரை
இன்பத் தேனே!
தனைப்பற்றி நினைத்திருப்பின்
தழைத்தமரம் நிழல், கனிகள்
தரும்மா, அம்மா?
நினைப்பற்றுஇம் மொழிநினைத்தேன்;
நீங்கள் எல்லாம்
எனைப் பற்றி வரநினைத்தேன்!
எவ்விடத்தும் எந்நாளும்
இழந்தேன், என்னை!

அதனால்தான் நூல்படித்தேன்;
ஆழ்ந்தவர லாறறிந்தேன்;
அவை சிந்தித்தேன்!
எதனால்நம் தமிழெல்லாம்
இனமெல்லாம் நாடெல்லாம்
இழந்தோம் - என்றே
முதல்நாளும் இடைநாளும்
கடைநாளும் சிந்தித்து,
முதுமை கண்டேன்!
இதனால்தான் அம்மா,நாம்
இருக்க இடம் இல்லாமல்
இடர்கள் உற்றோம்!

பணியேற்றுச் செய்து பணம்
படித்தெழுதி வந்தபணம்
பலநூல் வாங்கத்
துணிவேற்றுச் செலவழித்தேன்!
துயர்நீங்கக் கடன்பெற்றேன்!
தொல்லைப் பட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/212&oldid=1447026" இலிருந்து மீள்விக்கப்பட்டது