பக்கம்:கனிச்சாறு 7.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  181


140

வெங்காலூர்ப் பாவாணர்
தமிழ்மன்றத்திற்கு வாழ்த்து.


பொங்குங் கடல்சூழ்ந்த பூவுலகில் எந்தமிழர்
எங்கண் இருந்தாலும் எந்தமிழும் அங்கிருக்கும்!
திங்கள் உலகத்தும் தீந்தமிழ்போய் வாழ்வெடுக்கும்
மங்கா வரலாற்று மாண்பிதுவாம்; மெய்ம்மையிதாம்!

இங்கிதனுக் கோரெடுத்துக் காட்டாய் இலங்குவதே,
‘பெங்களூர்’ வாழும் பிழையாத் தமிழுளங்கள்.
பொங்கி எழுமுணர்வால், பொய்யாத தொண்டுளத்தால்
மூவாத செந்தமிழ்க்கே மூச்சிருக்கும் நோக்கத்தால்
பாவாணர் தம்மின் பெயரால் தமிழ்மன்றம்
ஏவாமல் தோற்றி இருக்கின்ற நற்செயலும்! 10

நாவால் தமிழ்வாழ்க வாழ்கவென நூறுமுறை
ஆவல் பெருக அரற்றியதால் வாழ்ந்ததென்ன?
தூவல் எடுத்துத் துலங்குகவே செந்தமிழென்
றெண்ணற்ற வாறாய் எழுதியதால் கண்ட தென்ன?
பண்ணெடுத்துப் பாடிப் பைந்தமிழை வாழ்த்தியவர்
எண்ணற்ற கோடி! இருந்தும் பயனென்ன?

கண்ணற்றோம்; மேன்மைக்
கருத்தற்றோம்; மானமற்றோம்!
உண்ணற்கும் மேலாய் உடுத்தற்கும் மாண்பற்றோம்!
மண்ணற்ற நீண்ட மரம்போல் நிலையற்றோம்!
பேச்சுப்பேச் சென்றுபல பேசி முடித்துவிட்டால் 20
ஆச்சுதமிழ்த் தொண்டென்போம்;
அப்புறமோ பொய்வாழ்க்கை!
வாய்த்த பணத்தின்முன் வாயைப் பிளக்கின்றோம்!
ஏய்த்ததுவோ, கையூட்டோ, எவ்வழியே ஆனாலும்
காய்த்த மரக்கிளையைக் கையால் உலுக்கிடல்போல்
பேய்த்தன்மை கொண்டு பணத்திற் கலைகின்றோம்!
தேடும் பெரும்பணத்தால் தேடுகின்ற சீரென்ன?
வாடும் மனைவியென்றும் மக்களென்றும் வாழ்வெல்லாம்
கூறிவரல் அல்லால் குமுகாய வாழ்விழந்தோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/226&oldid=1447068" இலிருந்து மீள்விக்கப்பட்டது