பக்கம்:கனிச்சாறு 7.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  191


பொய்யுணர் வின்றிப் புணர்ந்தனர்காண்!
புரைவினை யின்றி மணந்தனர் காண்!
ஐயுணர் வின்றி ஈரிருகால்
அறவழி நடந்திட இசைந்தனர்காண்!
பெய்மழைக் குலகம் பிழைசெய்மோ?
பெரும்பேர் இன்பம் பொழியாதோ?
மொய்யுணர் வெஞ்சொல் மெய்பெறுமேல்
மூன்றாம் பிறையே வளருதியே! 3

குலஞ்செய் குடிநலங் காத்தனர்காண்!
கூன்மொழிக் கவர்செவி கைத்தனர்காண்!
புலஞ்சேர்ந் துலகுயப் பயன்காட்டும்
பொய்யா மக்களைப் பெறுகுவர்காண்!
நிலஞ்சேர் வளங்கள் நேராவோ?
நேர்ந்தவர்க் கின்பம் தாராவோ?
நலஞ்செய் யெந்நா நலிவிலதேல்
நான்காம் பிறையே வளருதியே! 4

இழிவில் தலையறம் இணைந்தனர்காண்!
ஈடில் ஒழுங்கோ டணைந்தனர்காண்!
பழியில் மொழிசெய் பண்பினர்தம்
பக்கத் திருந்தே உய்குவர்காண்!
கழிபே ரின்பங் காணாரோ?
கண்டவர் பெற்றோர் பேணாரோ?
அழிவில் பெரும்புகழ் அடைவரென்றால்
ஐந்தாம் பிறையே வளருதியே! 5

தூக்கிய கொள்கைகள் பூண்டனர்காண்!
தூங்கா தரும்பணி காண்குவர்காண்!
ஊக்கிய அறநெறிக் கவர்வாழ்வை
ஊழ்த்திட இருபொழு துழைக்குவர் காண்!
தேக்கிய நறுநலம் நாடாதோ?
தேடாப் பொருள்கை கூடாதோ?
ஆக்கிய பாநடை பெறுமென்றால்
ஆறாம் பிறையே வளருதியே! 6

தமியருள் தாமாய்க் கலந்தனர்காண்!
தங்கருத் திழித்தினிப் புலந்திலர்காண்!
தமிழ்மொழி நாடதன் மக்களெல்லாம்
தம்முயிர் உடல்பொருள் என்றனர்காண்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/236&oldid=1447095" இலிருந்து மீள்விக்கப்பட்டது