பக்கம்:கனிச்சாறு 7.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

உமிபுடைத் திருகை நோவாரோ?
உழைத்துழைத் தின்பந் தாவாரோ?
இமிகர விலன்மொழி வினைபெறுமேல்
ஏழாம் பிறையே வளருதியே! 7

புதுமனைக் கிவரிணைந் தேகுவர்காண்!
புன்செயற் கிவருளம் வேகுவர்காண்!
மதுமலர்க் குழலியும் மணிமார்பும்
மற்றவர்க் குற்றவர் ஆகுவர்காண்!
முதுமையில் இளமையைக் காணாரோ?
முத்தமிழ் வாழ்வினைப் பேணாரோ?
எதுநலம் அதுபெறல் மெய்யென்றால்
எட்டாம் பிறையே வளருதியே! 8

மூச்சொடு மூச்சிணைந் துயிர்த்தனர்காண்!
முகத்தொடு முகமிணைந் தயர்ந்தனர்காண்!
பேச்சொடு பேச்சிணைந் துரைத்தாராய்
பிழைதனிற் பெரும்பொறை கண்டனர்காண்!
ஏச்சிலை! இழிவிலை! அன்னவர்க்கே!
இத்தரை நிலவொளிர் விண்அவர்க்கே!
ஓச்சுக அவர்புகழ்! உண்மையிதால்
ஒன்பதாம் பிறையே வளருதியே! 9

வந்தன வருவன எண்ணுவர்காண்!
வருநோய் தவிர்த்துண வுண்ணுவர்காண்;
தந்தனர் நினைந்தவர் மகிழ்வுறவும்
தாரார்க் கும்பொருள் தருகுவர்காண்!
முந்தையர் பெரும்புகழ் விளைக்காரோ?
முளையெடுத் துயர்ந்தவர் கிளைக்காரோ?
பந்தரின் கொடியெனப் படர்வாரேல்
பத்தாம் பிறையே வளருதியே! 10

தீதினை நன்றென மயங்கிலர்காண்!
தேய்வினை மாய்வன முயங்கிலர்காண்!
சூதினைக் கரவினைக் காணாராய்ச்
சூழ்ச்சியை வீழ்த்திடத் தயங்கிலர்காண்!
ஏதிலார்க் கின்னிழல் போல்வாரே!
இரப்பவர்க் கொருவழி கோல்வாரே!
பாதியன் னானவட் பாதியென்றால்
பதினொன் றாம்பிறை வளருதியே! 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/237&oldid=1447097" இலிருந்து மீள்விக்கப்பட்டது