பக்கம்:கனிச்சாறு 7.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௪

கனிச்சாறு ஏழாம் தொகுதி


35. ஆசிரியரின் தன்விளக்கப் பாடல். இதில் தம்மை எவரும் விளங்கிக் கொள்ளவில்லையே என்று கவலுறுகிறார்.

36. தம் அறிவும், மனமும், செயலும் எந்த அளவு பரந்து விரிந்தது எனும் முழுத் தன்னம்பிக்கையோடு எழுதுகிறார் பாவலரேறு.

37. சென்னை வந்தபின் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியோடு, நெருக்கடிநிலை (மிசா)ச் சிறைக்கழிப்புக்குப் பின்னர் ஐயா எழுதிய தன் விளக்கப்பாடல் இது.

38. தம் உயிரும் அகமும் எவ்வாறு செந்தமிழ்க்கென வாழ்கின்றன என்பதை உணர்த்துகிறார் பாவலரேறு.

39. தம் வல்லுடல் சுருண்டு படித்திடினும், நெஞ்சாங்குலையைக் கசக்கிப் பிழிந்திடினும் மொழி, இன, நாட்டினை நிமிர்த்திடச் செய்யாமல் நீட்டிப்படுத்திடேன் - என்று வீறுரைக்கிறார் பாவலரேறு.

40. மொழி, இன, நாட்டுரிமைக் கொள்கையையே தம் உயிர்க் கொள்கை என்றும் தம் கடமை என்றும் ஐயா அவர்கள் விளக்கும் பாடல்.

41. தம்மை, அன்பு கொண்டவர், அறிவுடையோர் என்றெல்லாம் கூறிக் கொண்டவர், எவரும் எம் அருந்துணைக்கு வராமல் போனதோடுமல்லால் எம் அறிவையும், செயலையும் பெரும்பிழை பேசிப் பழி காண்கின்றனரே என ஐயா அவர்கள் வருந்திப் பாடிய பாடல்.

42. உண்மையான தம் உளத்தினை நம்பிடாமல் பேதைபோல் தம்மைப் பேசுவதைத் தவிர்த்துத் தீதிலாது இனப் பணியாற்றுவேன் எனச் சூளுரைக்கிறார் பாவலரேறு.

43. எத்துணை இழிவுகள் பழிகள் கூறிடினும் தனியனாய் உழைப்பவர் உழைப்பினுக்குத் துணை செய்தும், மொழி, இன நாட்டுரிமை பெற உழைத்திடுவார்க்குத் தம்முயிர் ஈந்தும் தமிழருக்கு உலகினில் புகழ் சேர்ப்பதாய் வீறுரைக்கிறார் பாவலரேறு.

44. ஊருக்கு நல்லன செய்வதான, வேருக்குள் நீர்விடும் வேலையான தம் போக்கில் மாறுதல் இல்லை என்று உறுதிப்படுத்துகிறார் பாவலரேறு.

45. தம்மேல் பழிசுமத்துவதான பலரின் செய்திகளில் எவ்வகை உண்மையும் இல்லை என்றும் - வினைபடும் வகையினால் ஏற்படும் பற்பல விளைவுகள் வேறு வேறு தோற்றம் கொண்டவை- என்றும் விளக்குகின்றார் பாவலரேறு.

46. பொய்யைச் சொல்லி, பழியைச் சொல்லி, எத்தனைபேர் ஒருங்கிணைந்து புறப்பட்டாலும் அன்னைத்தமிழில் கரைந்துவிட்ட தன்னை வீழ்த்த முடியாதென்று புரியுமா? - என்று வினாவாய் எழுப்பி விளக்குகிறார் பாவலரேறு.

47. துன்பம் வந்து சூழினும் துவண்டிடாமல், தோல்வி தொடர்ந்து தாக்கினும் தொய்வு கொண்டிடாமல் தம்மைத் தமிழுக்கும், இன நாட்டுக்குமென நிறுத்திக்கொண்டதை விளக்குகிறார் பாவலரேறு அவர்கள்.

48. தமிழ்நிலத்தைப் பெற்றிட வழக்காடும் தமது மனம் எவற்றினும் வாடாததும், வருந்திடாததும் ஆகும் என்று விளக்குகின்றார் ஐயா அவர்கள்.

49. தம்மிடையே வந்து தமக்கு உதவுவதாய்ப் பேசிவிட்டுப் பின்னால் சென்று தூற்றுகிற குறுமதி படைத்தோரின் போக்குகளுக்கு இசைவாய்த் தம்மால் இருந்திட இயலாது. தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/25&oldid=1445493" இலிருந்து மீள்விக்கப்பட்டது