பக்கம்:கனிச்சாறு 7.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


179

தேவநேயப் பாவாணரின்
“திருக்குறள் தமிழ் மரபுரைச்” சிறப்புப் பாயிரம்!


பத்துரைக்கு மேலும் பரிமே லழகரோ
டொத்தவுரை நூறுசெய்தும் ஒன்றாமே - மெத்ததிரு
வள்ளுவனார் நூலுக்கு வாய்மை உரைசெய்தார்
தெள்ளுதமிழ்ப் பாவாணர் தேர்ந்து. 1

நுண்ணிய நூலறிவும் நுண்மாண் நுழைபுலமும்
திண்ணிய கேள்வியுந் தீர்தலால் - எண்ணிய
தெய்வத் திருக்குறட்குத் தேவநே யன்செய்நூல்
உய்யக் கிடைத்த வுரை. 2

ஆர்ந்த தமிழ்மொழியோ டாரியமும் ஆங்கிலமும்
ஏர்ந்த பிறமொழியும் ஏய்வுறவே - ஊர்ந்தமதித்
தேவநே யன்செய் தெளிந்த குறளுரையால்
காவனே ருற்றதெனக் காண். 3

சொல்லும் பொருளுந் தொகவாய்ந்து தொல்வரலா
றொல்லும் பலவகையா லோர்ந்துணர்ந்து - வெல்லும்
படியுரைத்த பாவாணர் பாரித்த வாற்றற்
கடியுரைத்தல் யார்க்கும் அரிது. 4

இனம்பேணற் கென்றெழுந்த வின்குறட்குத் தந்தம்
மனம்போன வாறு மயங்கிப் - புனைந்துரைத்த
பான்மை தவிர்த்துநூற் பாங்குரைத்தார் பாவாணர்
மேன்மை பிறங்கிற்று மேல். 5

நரிசூ லுறவரிமா நல்கிதென்றே யற்றைப்
பரிமே லழகர் பயந்துரைத்தார் - ஒற்றைப்
புரிமேல் கரிநடந்த பொய்யைப்பா வாணர்
எரிமே லெறிந்தா ரிகழந்து. 6

வல்லார்ந்த செந்தமிழில் வாய்ந்த திருக்குறள்போல்
சொல்லார்ந்த மற்றவற்றில் சொல்லரிதாம் - சொல்லார்ந்த
செந்தமி ழுள்ளுஞ் செயவரிதாம் பாவாணர்
முந்துரை செய்நூன் முறை. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/259&oldid=1447139" இலிருந்து மீள்விக்கப்பட்டது