பக்கம்:கனிச்சாறு 7.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


24

தனித்துப் பார்க்காதீர்!


தனித்துப் பார்க்காதீர்! - என்னைத்
தனித்துப் பார்க்காதீர்! - என்
இனத்தை நீக்கி,
‘என்’னையும் ‘என’தையும்
தனித்துப் பார்க்காதீர்! - இனியும்
தனித்துப் பார்க்காதீர்!

‘என்’என்று சொன்னாலும்
எனக்குள்ளும் ‘நீர்’ தாம்!
‘என’ தென்று சொலும் சொல்லும்
இனங்காக்கும் ‘நீர்’ தான்!
‘உன்’ என்று சொன்னாலும்
உமக்குள்ளும் ‘நான்’ தான்!
உமதென்று சொலும் சொல்லும்
உரிமைக்குப் பூண்தான்! (தனித்துப்)

இனித் ‘தமிழ்’ என்றாலும்
எனைத் தாங்கும் 'உயிர்' தான்!
என் ‘உடல்’ ‘பொருள்’ யாவும்
என் இனப் பயிர்தான்!
தனித்தவன் ஆனாலும்
‘தமிழ்’ ஈன்ற சேய்நான்!
தாய் அவள் நமக்கெல்லாம்;
தமர் நீங்கள்! வாய் நான்! (தனித்துப்)

என்னுடல் எனதில்லை;
தமிழ்விளை வயல்தான்!
என்னின்ற விளைவெல்லாம்
செந்தமிழ்ப் பயிர்தான்!
இன்னலும் இடர்ப்பாடும்
எனையேற்றும் ‘படி’ தான்!
ஏற்றமோ இறக்கமோ
எதும்வெற்றிக் கொடிதான்! (தனித்துப்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/81&oldid=1446053" இலிருந்து மீள்விக்கப்பட்டது